சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய 3 மாநிலங்களில் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. இந்த மாநிலங்களில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ந்தேதி தொடங்கி 19ந்தேதியுடன் முடிவடைந்தது. 20ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நிலையில், இன்று, வேட்புமனு வாபஸ், அதைத் தொடர்ந்து  இன்று மாலை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மொத்தம் 7,255 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாத, உரிய ஆவணங்கள் சமர்பிக்காத, 2,438 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 480 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் 382 பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட மொத்தம் 2180 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், அவர்களில் 1061 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.