ஸ்டாலினுக்கு தலைமைப்பதவியா? :  கருணாநிதி பதில்

Must read

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆனந்தவிகடன் இதழுக்கு  அளித்த பேட்டியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் இருந்து சில கேள்வி – பதில்கள்..
download-1
நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன்’ என, தி.மு.க முப்பெரும் விழாவில் திடீரெனப் பேசினீர்களே… எதனால் இந்த வேகமும் கோபமும்?”
‘‘உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது அல்ல; உள்ளத்தால் சொன்னது அந்தச் சொற்கள். `ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்களே, அதைப் போன்றது இந்த மாபெரும் இயக்கம். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ லட்சியங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ் இன, மொழி, நாட்டு முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றிடவேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திட வேண்டும். அவற்றை வரையறை செய்து, பாதை மாறாமல் பயணம் தடை ஏதும் இன்றி நடைபெறவும், இந்த இயக்கத்தை எதிர்காலங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேவையானவற்றை வகுத்துத் தொகுத்திட வேண்டும் என்ற சிந்தனையில் சொல்லப்பட்ட கருத்து அது; உண்மையான ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட எண்ணம் அது.”
கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவர்!’ என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்!”
‘‘நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல. என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய ‘ஆனந்த விகடன்’ வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.
தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”
“தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு – சுயமரியாதை, இனஉணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.
‘தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் செயல்பாட்டை எப்படிக் கணிக்கிறீர்கள்?”
‘‘தம்பி ஸ்டாலினின் செயல்பாடு, சிறப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கட்சியினரையும் கட்சியையும் அவர் வழிநடத்திச் செல்லும் பாங்கு, மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக உள்ளது
அரசியல் பரபரப்புகளில் இருந்து ஓய்வுபெற்று தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனை ஏதேனும் உங்களுக்கு உள்ளதா?”
“ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைப்பவன் இந்தக் கருணாநிதி. அதனால் தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனையே இல்லை என நீங்கள் ‘குழப்படி’ வேலை செய்ய வேண்டாம். எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்து கழகப் பணிகள் பலவற்றை தம்பி ஸ்டாலின்தான் ஆற்றிவருகிறார் என்பதுதான் உண்மை.”
 
 
 
 
 
‘ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்’ என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?”
‘‘ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய  அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.
தி.மு.க-வில் மு.க.அழகிரி இல்லாததை, ஓர் இழப்பாக நீங்கள் கருதுகிறீர்களா?”
“இருப்பதை எண்ணி மகிழ்ந்து, மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து, ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்.”
– இவ்வாறு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article