செங்கல்பட்டு

காய்கறி வண்டியில் முதியவரின் பிணத்தை எடுத்துச் சென்ற போது பிடிபட்ட செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து அந்த இல்லம் விரைவில் மூடப்படும் என தகவல்கள் வந்துள்ளன

சமீபத்தில் சென்னையை அடுத்த சாலவாக்கம் எடையம்பூதூர் சாலையில் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு வயதான பெண் அலறுவதைக் கண்டு அந்த வாகனம் காவல்துறையால் நிறுத்தப்பட்டது.    அதன் உள்ளே ஒரு மூதாட்டி அவருடைய சம்மதமின்றி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.    அவருடன் ஒரு முதியவரும்,  காய்கறிகளுக்கிடையில் மறைத்து வைக்கப் பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த வாகனம் செங்கல்பட்டு அருகில் உள்ள பாலேஸ்வரம் என்னும் இடத்தில் இயங்கும் செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்துக்கு சொந்தமானது என தெரிய வந்தது.   அதைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் வட்டார வருவாய்த்துறை அதிகாரி உட்பட உயர் அதிகாரிகள் சோதனை நடத்தினர்    அந்த இல்லத்தில்  86 முதியவர்கள் இருந்துள்ளனர்.   அனைவரும் அவர்களுடைய விருப்பமின்றி அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த முதியோர் இல்லத்துக்கு சொந்தமாக ஒரு தனி கல்லறையும் உள்ளது.   முதியோர் இல்லம் மற்றும் கல்லறை ஆகியவை உரிமம் இன்றி நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.   இதற்கிடையில் அங்கு எடுத்துச் செல்லப்பட்ட பிணம்  விஜயகுமார் என்னும் முதியவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   அந்தப் பிணம் மற்றும் அந்த இரு முதியவர்களும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த இல்லம் ஃபாதர் தாமஸ் என்னும் பாதிரியாரால் கடந்த 2006 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இறக்கும் தருவாயில் உள்ள முதியோருக்கு உதவ ஆரம்பிக்கப் பட்டது என கூறப்படும் இந்த இல்லத்தை பற்றி அக்கம்பக்கம் உள்ளோர் கடுமையான புகார்களை தெரிவித்துள்ளனர்.   இந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்களின் உடல் உறுப்புக்கள் மற்றும் எலும்புகள் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

இது குறித்து வட்டார வருவாய்த்துறை அதிகாரி எதுவும் கூற மறுத்து விட்டார்.   அங்குள்ள முதியோர்கள் வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுவதால்  விரைவில் இந்த இல்லம் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.   மேலும் பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு அதிகாரி இந்த இல்லத்தில் பல சந்தேகத்துக்குரிய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.