டில்லி

ந்தியாவில் விரைவில் ராணுவ ஆட்சி வரும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது சுமார் 72 வயதாகும் இவர் சென்னை உயர்நீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தவர் ஆவார். இவருடைய வெளிப்படையான கருத்துக்கள் பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இவர் தன்னுடைய டிவிட்டர் பதிவில் விரைவில் இந்தியாவில் ராணுவ ஆட்சி வரும் என தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மார்க்கண்டேய கட்ஜு, “சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான எனது உறவினர் என்னை சந்தித்தார். அவரிடம் நான் இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் ராணுவ ஆட்சி வரும் என தெரிவித்தேன்.

அதை மறுத்த அவர் இந்திய ராணுவம் அரசியலை சார்ந்தது அல்ல எனவும் எப்போதும் அரசியலை சாராது எனவும் கூறினார்.

அவரிடம் நான் அதற்கான காரணங்களை கூறினேன். வர உள்ள மக்களவை தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்காத நிலை உண்டாகும். அதனால் மத்தியில் மம்தா, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், தேஜஸ்வி யாதவ், திமுக, அதிமுக ஆகிய தலைவர்கள் கட்டுப்பாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். இந்த மாநிலக் கட்சிகளிடையே பொதுவான ஒற்றுமைக் கொள்கை ஒன்றுமே கிடையாது.

ஆகவே அவர்களுக்குள் எந்தத் துறை யாருக்கு என்பதில் முதல் சண்டை உருவாகும். (இது ஏற்கனவே கர்நாடகாவில் நடந்தது நினைவு இருக்கலாம்), அதன் பிறகு வேறு பல விவகாரங்களிலும் தகராறு தொடரும். கடந்த 1977 ஆம் வருடம் ஜனதா கட்சி ஆட்சி அமைத்த போது இதே நிலை ஏற்பட்டது. இறுதியாக பதவி மற்றும் அதிகாரத்துக்காக ஒருவரை ஒருவர் அழிக்க முற்படும் நிலை உருவாகும்.

இதன் மூலம் நாடு முழுவதுமே குழப்பம் ஏற்பட்டு ஒரு வெற்றிடம் உருவாகும். வெற்றிடம் நீண்ட நாள் நிலைக்காது என்பது அறிந்ததே. அதை நிரப்ப ராணுவத்தால் மட்டுமே முடியும். அதன் பிறகு ஏற்படும் சூழ்நிலைகளால் ராணுவமே ஆட்சியை கைபற்ற முயலும். அதாவது துப்பாக்கி முனையில் அதிகாரம் நடக்கும்.

இதற்கு என்னிடம் பல சரித்திர சம்பவங்கள் உதாரணமாக உண்டு.

1. கடந்த 1936 ஆம் வருடம் ஸ்பெயின் நாட்டில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் கலகவாதிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்தனர். அந்த அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே ஒருவரோடு ஒருவர் தகராறு செய்வதும் தொடங்கியது. இதனால் அந்நாட்டில் குழப்பமான நிலை ஏற்பட்டது. தொழிலாளர்கள் நில உரிமையாளர்களின் நிலங்களை ஆக்கிரமித்தனர். தேவாலயங்கள் அழிக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடபட்டன. தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன் பிறகு ஜெனரல் பிராங்கோ தலைமையில் நடந்த ராணுவப் புரட்சியால் 1939 அம் வருடம் ராணுவத்தினர் ஆட்சியை பிடித்தனர்.

2. பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா மறைவுகுப் பின் குழப்பமான நிலை ஏற்பட்டு அடுத்த பிரதமர் லியாகத் அலி கான் கொல்லப்பட்டார். அதன் பிறகு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்தது.

3. கடந்த 1970 ஆம் வருடம் சிலி நாட்டில் மார்க்சிஸ்ட் அலந்த் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமெரிக்க நாட்டு பழ நிறுவனங்களின் ஏராளமான நிலைத்தை அரசுடமை ஆக்கினார். அத்துடன் அமெரிக்கா வின் ஐடிடி நிறுவனத்துக்கு சொந்தமான தாமிர சுரங்கங்களையும் தேசியமயமாக்கினார். இதை ஒட்டி நடந்த போராட்டத்தில் நாடெங்கும் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை அந்நாட்டு ராணுவம் போக்கி 1973 ஆம் வருடம் ஜெனரல்பினொசெட் தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது.

4. இதே போல் ஒரு குழப்பம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட போது ஜெனரல் சுகார்தோ தலைமையில் 1968 ஆம் வருடம் ராணுவம் ஆட்சியை பிடித்தது.

5. ரோமன் குடியரசு உடைந்த போதும் இது போல ஒரு குழப்பமான காலகட்டம் உண்டானது. அப்போது சீசரின் வளர்ப்பு மகனான ஆக்டாவியஸ் தலைமையிலான ராணுவம் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு ஆக்டாவியஸ் ரோமப் பேரரசை நிறுவி தன்னை அகஸ்டஸ் என அறிவித்துக்கொண்டார்.

இது போல பல உதாரணங்கள் உள்ளன” என பதிந்துள்ளார்.