கோயம்புத்தூர்

விரைவில் அரசு பேருந்துகளில் இ டிக்கட் வசதி அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று கோயம்புத்தூரில் கோவை, திருப்பூர், ஈரோடு,உதகை மண்டலத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுகள் என மொத்தம் 518 பேருக்கு, ரூ.145.58 கோடி மதிப்பிலான பணப் பலன்களை மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் வழங்கினர்.

அப்போது அமைச்சர் சா.சி.சிவசங்கர்

“புதிதாக 2,000 பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. மேலும், ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 2,400 பேருந்துகள் வாங்கப்படும். அவற்றில் 430 தாழ்தளப் பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மற்ற பேருந்துகளை வாங்க விரைவில் டெண்டர் விடப்படும். இன்னும் 4 முதல் 6 மாதங்களில் புதிய பேருந்துகள் வந்துவிடும். 

ஓய்வூதியர்களின் கூடுதல் பஞ்சப்படி தொடர்பான கோரிக்கை, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.  சென்னை மாநகர அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, தானியங்கி கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அது நடைமுறைக்கு வரும். தொடர்ந்து, மற்ற இடங்களிலும் இது விரிவுபடுத்தப்படும்.”

என்று கூறி உள்ளார்.