வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – சிகப்பழகும் கட்டுடலும்

Must read

வரலாற்றில் சில திருத்தங்கள்! இந்த தொடர் வெடிக்கும்: சிகப்பழகும் கட்டுடலும்

அத்தியாயம் -6                                                    இரா.மன்னர் மன்னன்

இன்று தமிழகத்தின் பெண்கள் ஆண்கள் அனைவரது கருத்திலும் பதிந்துவிட்ட இரண்டு வார்த்தைகள்

1.        சிகப்பழகு

2.        கட்டுடல்

உபயம் வழக்கம் போல ஐரோப்பாதான். ஐரோப்பியர்கள் அறிவியலிலும் அறிவு வளர்ச்சியிலும் எவ்வளவுக்கு எவ்வளவு முன்னேறியவர்களோ அதே அளவுக்கு உணவுப் பழக்கங்களிலும் அழகுக் கோட்பாடுகளிலும் பின்தங்கியவர்கள். அவர்களை எதில் பின்பற்ற வேண்டுமோ அதை விட்டுவிட்டு, எதில் பின்பற்றக் கூடாதோ அதை நாம் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு இருக்கிறோம். சிகப்பாக இருப்பதுதான் அழகு, கட்டுடலே ஆண் தன்மையின் வெளிப்பாடு – என்ற இந்த இரண்டு ஐரோப்பிய கருத்தாக்கங்களும் மனித இனத்தை எதை நோக்கி இழுத்துச் செல்கின்றது என்பதை அறிந்தவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் இவற்றை ஆதரிக்க மாட்டார்கள்.

முதலில் சிகப்பழகைப் பற்றிப் பார்ப்போம்.

அழகு என்பதற்கும் நிறத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சிகப்பு அல்லி மலர் ஒரு அழகு என்றால் கரும் குவளை மலரும் ஒரு அழகு. இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவதே தவறானது. மலரையே நிறங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது எனும்போது மனிதர்களை?. மகாகவி பாரதியாரின் ‘வெள்ளை நிறத்தொரு பூனை’ கவிதை ஒரு பூனைக்குப் பிறந்த குட்டிகள் பல நிறங்களில் இருந்தாலும், அவற்றுக்கு இடையில் வேற்றுமை இல்லை. மனிதர்களில் ஏன் வேற்றுமை? – என்ற கருத்தை சமூகத்திற்கு வெளிப்படுத்தியது. அது இன்னும் சென்று சேரவில்லை என்பதே சோகம்.

மனிதர்களைப் பொருத்தவரையில் அவர்களது நிறங்கள் அவர்கள் வாழும் பகுதிகளைப் பொருத்து வேறுபடுகின்றன. பூமியின் வெப்பப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கருப்பாகவும், குளிர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெண்மையாகவும் உள்ளனர். கரடிகளும் புலிகளும் கூட அப்படியே. மனிதர்களின் நிறத்தை மெலனின் என்ற சுரப்பிதான் தீர்மானிக்கின்றது. இந்தச் சுரப்பி அதிகம் சுரக்கக் கூடிய நபர்கள் கருமையாகவும் குறைவாக சுரப்பவர்கள் வெண்மையாகவும் உள்ளனர். உடல் குறைபாட்டால் சிலருக்கு இந்தச் சுரப்பி சுரக்கவே செய்யாது. அவர்களது உடல் முழுதும் வெண்மையாக மாறிவிடும் இந்தக் குறைபாட்டை ‘அல்பினோ’ என்று அழைக்கின்றனர். அல்பினோ வந்த ஆப்ரிக்கர் ஒரு ஐரோப்பியரை விடவும் வெண்மையாக இருப்பார். விலங்குகளுக்கும் இந்தக் குறைபாடு வருவதுண்டு.

வெப்ப மண்டலத்தைச் சேர்ந்த தமிழகத்தின் பூர்வகுடிகள் கருப்பு நிறம் கொண்டவர்களாகவே இருக்க முடியும். அந்த அடிப்படையில் தமிழர்களின் நிறம் கருப்புதான். அதுவே தமிழகத்தின் வெப்பநிலைக்கு அன்றும் இன்றும் என்றும் ஏற்றது. ஆனால் ’சிகப்பாக இருப்பதுதான் அழகு’ என்ற சிந்தனை தமிழர்களைத் தங்களுக்குக் கொஞ்சமும் பொருந்தாத வெள்ளை நிறத்தின் பக்கம் ஈர்க்கின்றது. எப்போது தோன்றியது இந்த சிந்தனை?.

தமிழகத்தில் காணக் கிடைக்காத நிறம் என்ற அளவில் வெள்ளைத் தோல் மீதான ஈர்ப்பு தமிழகத்தில் எப்போதும் இருக்கவே செய்தது. ’வெள்ளைக் காக்கா பறக்குது பார்’ என்றால் நாம் திரும்பிப் பார்ப்பது போல. பின்னர் வெள்ளைத் தோல் அழகு என்ற எண்ணம் இடைக்காலத்தில் மெல்ல வலுப்பெற ஆரம்பித்தது. அப்போது கடவுளர்களே நிறமாற்றம் செய்யப்பட்டார்கள். உதாரணமாக ஆரம்பகாலத்தில் கருநிறக் கடவுளாக கருதப்பட்ட சரஸ்வதி இடைக்காலத்தில் ஒரேயடியாக உஜாலாவுக்கு மாற்றப்பட்டார்.

வேறு மாநிலத்தைச் சேர்ந்த தாய்க்கும் சோழர் குல அரசனுக்கும் பிறந்த இளவரசன் வெள்ளையாக இருந்த காரணத்தால் அவன் சுந்தர சோழன் என்று அழைக்கப்பட்டதும், தமிழகம் வந்த இசுலாமியர்கள் இங்கு ‘நிலவு போன்ற முகம் உடையவர்கள்’ என்ற பொருளில் முகமதியர்கள் என்று அழைக்கப்பட்டதும் வரலாற்றில் உண்டு. ஆனால் வெள்ளை நிறம் கருப்பை விடவும் உயர்வானது என்ற கருத்தாக்கம் தமிழகத்தில் இல்லை. ’தோலைப் பார்த்து மாடு பிடித்தால் தொழிலுக்காகாது’ என்பதைத் தமிழர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். இந்தியாவில் அனைத்து ஜாதியிலும் அனைத்து நிறத்தவரும் கலந்துவிட்டதால் நிற அடிப்படை பிரிவினைவாதம் வேரூன்றவில்லை.

ஐரோப்பியர்களின் அடிப்படையே வேறு. அங்கு உயர்வு தாழ்வு நிறத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது. ஆப்ரிக்க அடிமைகளைக் கொண்டு தங்கள் வளங்களைப் பெருக்கிய ஐரோப்பியர்கள் அந்த மனிதர்களைக் கால்நடைகளை விடவும் கேவலமாக நடத்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். இந்தப் பின்புலத்தால் ஐரோப்பியர்கள் வெண்மையை உயர்வானதாகவும் நன்மையின் சின்னமாகவும், கருமையை தாழ்வானதாகவும் தீமையின் சின்னமாகவும் கருதினார்கள். துக்கத்திற்கு கருப்புக்கொடி சமாதானத்திற்கு வெள்ளைக்கொடி என்பதெல்லாம் அவர்களின் சிந்தனைதான்.

ஐரோப்பிய அறிவோடு அதன் எண்ணங்களையும் கடன் வாங்கியதன் பலனாகவே நமது தமிழக மக்கள் தங்கள் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மையைக் கொண்டார்கள். விளம்பர யுகம் அந்தத் தாழ்வுமனப்பான்மையை இன்னும் தூண்டி அவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாக்கிக் கொண்டது. ’சிகப்பான, அழகான மணமகள் தேவை’ என்று ஆரம்பித்து ‘சிகப்பழகான மணமகள் தேவை’ – என்பதில் நமது சீரழிவு இப்போது நின்று கொண்டிருக்கின்றது.

சிகப்பழகு – பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை செய்திகள்:

1.        வெண்மை என்பது ஒரு நிறம் அதற்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை

2.        பிறக்கும் போது ஒரு குழந்தை என்ன நிறத்தில் பிறக்கின்றதோ அதைவிட வெள்ளையாக அதனை எந்த கிரீமாலும் மாற்ற முடியாது என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

3.        அழகுக் கிரீம்கள் மெலனினைக் கட்டுப்படுத்தி முகத்தை வெள்ளையாக்க முயற்சிகள் செய்தால் அது பல தோல்நோய்களுக்கே வழி வகுக்கும்.

4.        நீங்கள் அடைய முடியாத இலக்கை உங்கள் முன்பாக வைக்கும் சிகப்பழகுக் கிரீம்கள், உங்களை ஒரு மன நோயாளியாக மாற்றிக் கொண்டு இருக்கின்றன.

5.        அழகின் நிறம் இது என்று யாரும் சொன்னது இல்லை. கருப்பழகு, மாநிற அழகு எதுவும் சிகப்பழகுக்குக் குறைவானதும் இல்லை. ஆனால் ஆரோக்கியம் என்று வந்துவிட்டால் கருப்புத்தோல் மக்கள் முன்பு வெள்ளைத்தோல் மக்கள் போட்டி போட முடியாது. கருப்புத்தோலில் மெலனின் என்ற பாதுகாப்பு கூடுதலாக உள்ளதே காரணம். எனவே ஆரோக்கியத்தின் நிறம் கட்டாயம் கருப்புதான்.

6.        சிகப்பழகு கிரீம்களை விற்கும் நிறுவனங்களால் வெள்ளையர்கள் நிறைந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் சிகப்பழகுக் கிரீம்களை விற்க முடியாது, கருப்பின மக்களின் ஆப்ரிக்காவிலும் சிகப்பழகுக் கிரீம்களை விற்க முடியாது என்ற நிலையில், அவர்கள் மாநிற மக்கள் வாழும் ஆசிய நாடுகளை ஏமாற்றிப் பிழைக்கின்றனர். இவர்களின் விளம்பரங்கள் பெரும்பாலும் அறிவியலுக்குப் புறம்பானவை.

7.        தோல் நிறத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் சம்பந்தமே இல்லை.

8.        அழகுக் கிரீமுக்கு  ஆப்ரிக்காவிலும் சந்தை உண்டு!. அங்கு அவர்கள் விற்கும் கிரீமின் பெயர் ‘டார்க் அண்டு லவ்லி’!. அங்கெல்லாம் சிகப்பழகு என்ற பேச்சே இல்லை. சந்தைக்கு ஏற்ற வியாபார தந்திரம்!. இந்தத் தந்திரத்திற்கு பலியாகலாமா?

அடுத்து நாம் பார்க்க வேண்டியது கட்டுடலைப் பற்றி.

உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் நல்லதுதான். ஆனால் பல படிக்கட்டுகளோடு கூடிய உடலை சில மாதங்களில் பெற வேண்டும் என்ற குறுக்குப் புத்தியே தவறானது. இதில் ஆண்கள் பெண்கள் இருவரும் அறிய வேண்டிய செய்திகள் பல உள்ளன.

ஆண்கள் உடலின் வடிவத்துக்காக ஸ்டிராய்டுகளைப் பயன்படுத்தி உடலின் அமைப்பை மாற்றி, பின்னர் தோல் கிழிதல், உடல் பெருக்கம், நரம்புத் தளர்ச்சி, சதை தொங்குவது போன்ற பக்க விளைவுகளால் அவதிப்பட்டு தங்கள் வாழ்வைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர்.

அதிலும் ’சிக்ஸ் பேக்’ மோகம் மிகவும் மோசம். இதிலும் 8 பேக், 10 பேக் என்று இன்னும் படிகளை அதிகரிக்க ஆசைப்படுபவர்கள் உண்டு. இப்படியான கற்பனைகளில் உள்ள ஆண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை செய்தி, உடற் பயிற்சி செய்யும் போது உருவாக வேண்டியது 6 பேக்கா 8 பேக்கா என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது!. வயிற்றின் அமைப்பு 5 பேக் என்றால் 5தான் உருவாகும்!. அதை உடற்பயிற்சி மூலம் மாற்றுவது ஏறத்தாழ இயலவே இயலாதது. இந்த அடிப்படை கூட தெரியாமல் கனவு காணும் பலர் உழைப்பை வீணாக்கி துயரத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

மேலும் 6 பேக் உடல் நலத்திற்கு எதிரானதும் கூட!. ஒப்பிட்டுப் பார்த்தால் 6 பேக்கை விட, சிறிய தொப்பைதான் நல்லது!. அது அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும், உடல்நலக் குறைவு ஏற்பட்டு சாப்பிட முடியாமல் போனால் சிறிய தொப்பையில் உள்ள கொழுப்பும் நீரும் உங்களைக் காப்பாற்றும், 6 பேக் காப்பாற்றாது.

நமது உடலில் உள்ள விட்டமின்களில் 2 வகைகள் உள்ளன. முதலாவது கொழுப்பில் கரையக் கூடியவை, இரண்டாவது நீரில் கரையக் கூடியவை. விட்டமின் ஏ, விட்டமின் டி மற்றும் விட்டமின் கே ஆகியவை கொழுப்பில் கரையக் கூடியவை. கொழுப்பு குறைக்கப்படும் போது இவை உடலுக்குக் கிடைக்காமல் போகின்றன. விளைவு வெளியே உறுதியாகத் தெரியும் 6 பேக் ஆண்கள் எலும்புகள், பற்கள் ஆகியவற்றில் வலிமை இல்லாதவர்களாகவும். நரம்பு தொடர்பான நோய்களுக்கு எளிதில் இலக்காகக் கூடியவர்களாகவும் ஆகிறார்கள். ஆண் தன்மைக்கான ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரானின் உற்பத்தியும் இவர்களுக்கு பாதிப்பிற்குள்ளாகிறது. ஆண்மைத் தன்மையும் பறிபோகின்றது!.

தவிர ஒரு மனித உடலில் குறைந்தது 20 சதவீதமாவது கொழுப்பு கட்டாயம் இருக்க வேண்டும். 6 பேக் வர வேண்டுமென்றால் உடலில் கொழுப்பே இருக்கக் கூடாது!. இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் கொழுப்பை 5 சதவீதத்திற்கும் கீழே உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் கொண்டு வருகிறார்கள். நமது உடலின் வெப்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கொழுப்புதான். கொழுப்பினால் மட்டுமே குளிரைத் தாங்க முடியும். கொழுப்பு இழக்கப்படும்போது வெப்பக் கட்டுப்பாடும் இழக்கப்படுகிறது. ஊட்டச்சத்து கிடைக்காத உடலுக்கு இப்போது உரிய குளிர்ச்சியும் இல்லை.

கொழுப்பை அடுத்து நீருக்கும் ஆப்பு வைக்கிறது சிக்ஸ்பேக் மோகம். உடற்பயிற்சி செய்பவரின் வயிற்றில் 6 பேக் வெளியே தெரிய வேண்டுமென்றால் அவரது வயிற்றின் தசையோடு தோல் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் தண்ணீரைக் குடித்தால் அது தசைக்கும் தோலுக்கும் நடுவில் இடைவெளி ஏற்படுத்தி 6 பேக்கை தெரியாமல் செய்துவிடும். இதனால் மேடையேறும் போது இவர்கள் தண்ணீருக்கும் நோ சொல்லிவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு சாதாரண மனிதர்களே 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலையில், உடற்பயிற்சியால் வெப்பம் அதிகரித்த இவர்கள் ஒரு சொட்டு நீரைக்கூட குடிக்காமல் இருந்தே மேடை ஏறுகிறார்கள். இதனால் உடலில் எந்த விட்டமின்களும் கரைய வாய்ப்பில்லாமல் போகின்றது. இவற்றால் வெப்பம் அதிகமாகி மேடை ஏறிய அடுத்தநாள் மலத்தில் ரத்தத்தை வெளியேற்றும் நிகழ்வு உடற்பயிற்சி வீர்ர்களின் வாழ்வில் வழக்கமான ஒன்றாகிவிடுகிறது!.

பெண்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்கள். பெண்கள் ஒல்லியாக இருப்பதே கட்டுடல் என்று எண்ணுவதால் ஏற்படும் இழப்பு அவர்களுக்கு மட்டுமின்றி, மனித சமுதாயத்திற்கே பேரிழப்பாக முடிகின்றது.

’24 இஞ்ச்சில் இடுப்பு இருப்பதுதான் அழகு, அதற்கு சைஸ் ஜீரோ என்று பெயர்’ – என்பது சமீபத்தில் இந்தியாவை உலுக்கிய ஐரோப்பிய சிந்தனை. இதனால் நமது தமிழகப் பெண்களில் சிலர் இளையோ இளையென இளைத்துப் போகிறார்கள். அவர்களின் முகப்பொலிவு இழக்கப்படுவதோடு, அவர்கள் பலகீனமானவர்களாகவும் ஆகிறார்கள். சிலர் தினம்தோறும் சரியாக உணவு எடுக்காமல் இளைத்ததன் பலனைத் தங்கள் நடுத்தர வயதுகளில் அதிகமாகவே அனுபவிக்கிறார்கள். சைஸ் ஜீரோவுக்கான முயற்சிகளில் உயிரிழந்தவர்களும், கிட்னி செயலிழந்தவர்களும் உலகம் முழுவதும் அதிகம். இதனால் பல ஐரோப்பிய நாடுகள் சைஸ் ஜீரோ என்ற கருத்துக்கே தடை விதித்து உள்ளார்கள்!. சைஸ் ஜீரோ மாடல்களின் புகைப்படங்களை அட்டைப்படங்களாக வெளியிட பலநாடுகளில் நிரந்தரமாகத் தடையே உள்ளது!.

இந்த விஷயத்தில், கொடி இடை என்ற பண்டைய தமிழகக் கருத்தாக்கம் கூட முழுவதும் ஏற்புடையது அல்ல. அது ஒருவேளை பார்வைக்கு அழகாகத் தோன்றினாலும் ஆரோக்கியமானது அல்ல. ஏனென்றால் மருத்துவ அறிவியல் பெண்கள் அகலமான இடுப்பைக் கொண்டுள்ளபோது பிரசவம் எளிதாக இருக்கும், குழந்தை எளிதாக வெளியேறும் என்கிறது!. நாம் அழகு என்பதைத் தாய்மைக்கு எதிராகத் திருப்பினால் எப்படி? இன்னும் சில தாய்மார்கள் அழகுக்காக குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்ப்பதையும் நாம் பார்க்கிறோம். இதெல்லாம் ஒட்டுமொத்த மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியையே பாதிக்கக் கூடியவை!.

வசதியானவர்கள் அதிகம் உள்ள, கண்டதையும் சாப்பிடும் வழக்கம் உள்ள அமெரிக்க நாடுகளில் ஒல்லியான பெண்களைக் காண்பது அரிது. 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 5.4 அடி உயரம் உள்ள அமெரிக்கப் பெண்கள் கூட சராசரியாக 75 கிலோ எடையோடு இருந்தனர். 5.4 என்பது அங்கு மிகக் குறைவான உயரம். இடுப்பளவு பெரும்பாலும் 35 இன்ச்!.

’அரியது எதுவோ அதுவே அழகாகப் போற்றப்படும்’ – என்பது அமெரிக்க நியதி. அதுவே இடுப்பளவு விவகாரத்திலும் நடந்தது. ஒல்லியான பெண்களே அழகானவர்கள் என்ற கருத்தாக்கம் இப்படியாகவே அங்கு தோன்றியது. இதன் அர்த்தம் குண்டான பெண்கள் அழகற்றவர்கள் என்பது அல்ல!.

ஆரோக்கியமான நபரின் உயரத்திற்கும் எடைக்கும் உள்ள தொடர்பை இந்த அழகு குறித்த எண்ணங்கள் சிதைக்கின்றன. உயரத்திற்கும் உடல் அமைப்பிற்கும் தேவையான எடை இல்லாத பெண்கள், தங்களை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய வளரிளம் பருவத்தில் பட்டினி கிடக்கிறார்கள்!. சில ஐரோப்பிய பெண்கள் சைஸ் ஜீரோ உடலைப் பெற செய்த சாகசங்களைப் பற்றிக்கேட்டால் நமக்கு உடல் வியர்த்துவிடும். ஆசைக்காக தோன்றியதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு அது செரிக்கும் முன்பே வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுப்பது என்பது ஒரு சின்ன சாம்பிள்!.

இப்படி எல்லாம் உடல் எடையைக் கட்டுப்பட்டுத்தும் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னை அடிப்படையில் ஏற்படுகிறது. பின்னர் ஹார்மோன்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவை தவிர முடி உதிர்வு, தோல் வறட்சி – போன்ற கிளைச் சிக்கல்களும் உண்டு. உடலுக்கு சரியான ஊட்டச் சத்து போய்ச் சேராததால் மனநிலை பாதிப்பும் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது. பல விளம்பர மாடல்கள் கோபக்காரிகள் என்று பெயர் எடுப்பதும், சொந்த வாழ்வில் தோல்விகளைச் சந்திப்பதும் இதனால்தான்.

யாரோ சொன்ன வரையறைகளுக்காக இருக்கும் வாழ்வை அழித்துக் கொள்வதா? சிந்தித்துப் பாருங்கள். அழகு என்பது ஆரோக்கியத்தின் இணைச்சொல்லே அன்றி எதிர்ச்சொல் அல்ல!.

More articles

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article