
தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், சய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், இதுவரை ரூ.1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், “தமிழகத்தில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 249 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் பணியாளர்கள் நடத்தும் வாக்குச்சாவடிகள் 325 ஆக உள்ளது, இளைஞர்கள் மட்டுமே நடத்தும் வாக்குச்சாவடிகள் 79 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் 5,949 வாக்குச்சாடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 1,06,418 வாக்குச்சாவடி இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. இதேபோல், 75,064 கட்டுப்பாட்டு கருவிகளும், 75,064 விவி பேட் கருவிகளும் கையிருப்பில் உள்ளன. தேர்தல் பணிக்கு போதிய அளவு இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. வாக்குச்சாவடி இயந்திரங்கள் மற்றம் கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றை பொருத்தவரை 20 சதவீதம் அளவுக்கு கூடுதலாக உள்ளன. விவிபேட் 30 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கையிருப்பில் உள்ளது.
வாக்குப்பதிவு மையங்களில் 3லட்சத்து 60ஆயிரத்து 68அதிகாரிகள் பணியில் இருப்பார்கள்.
பாதுகாப்புப் பணிகளில் மொத்தம் 83,875 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
கால் சென்டர் (எண் – 1950), மீடியா கண்காணிப்பு, செலவு கண்காணிப்பு, வாக்குப்பதிவு கண்காணிப்பு என மொத்தம் 4 கட்டுப்பாட்டு அறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், கேமரா ஆகியவை கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி யில் புகைப்படமோ விடியோவோ எடுத்தால் 3 மாதம் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் கூறினார்.
வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, “தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச் சாவடிகளுக்கு சுமார் 1.06 லட்சம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது
.மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் 5,455 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் காரணமாக இதுவரை ரூ. 1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், ரூ.543 கோடி அளவுக்கு பொருட்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக 243 விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 163 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2,180 தவறான சமூக ஊடக பதிவுகளின் யுஆர்எல் பிளாக் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்புகளில் இருந்து 5,634 புகார்கள் பெற்றப்பட்ட நிலையில், அவற்றில் 17 புகார்கள் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மே 4ம் தேதி மொத்தம் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இவ்வாறு தெரிவித்தார்.