சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்.23) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135-பி பிரிவின் கீழ், தேர்தல் நாளன்று ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு அனைத்து வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநில அளவில் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது எந்தவிதமான தேர்தல் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளக் கூடாது. தொகுதிக்குச் சம்பந்தமில்லாத, பிரச்சாரத்திற்காக வந்திருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் நேற்றே தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தேர்தல் விளம்பரங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வாகன அனுமதிகள் அனைத்தும் தற்போது செல்லாததாகிவிடும்.
வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் தங்களது சொந்த வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வர அனுமதி இல்லை. இந்த நடைமுறைகள் நாளை வாக்குப்பதிவு முடியும் வரை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது
[youtube-feed feed=1]