சென்னை: ஐடிபிஐ வங்கி ரூ.600 கோடி கடனளித்தது தொடர்பான மோசடியில், தனது பெயரை தவறாக சேர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட லுக்அவுட் சர்க்குலரை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் தொழிலதிபரும் ஏர்செல் நிறுவனருமான சிவசங்கரன்.

செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த லுக்அவுட் சர்க்குலரை அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சிவசங்கரனின் இந்த மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வின் வின் ஓய், ஃபின்லான்ட், அக்ஸெல் சன்ஷைன் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ரூ.600 கோடி கடனை ஐடிபிஐ வங்கி வழங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென மத்திய விஜிலென்ஸ் கமிஷன் கோரியிருந்தது.

சிவா குழும நிறுவனங்களின் தலைவர் என்று தனது பெயரைக் குறிப்பிட்டு, முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், நான் அப்பதவியை கடந்த 2008ம் ஆண்டே ராஜினாமா செய்துவிட்டேன். மேலும், அக்ஸெல் சன்ஷைன் நிறுவனத்துடனும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

நான் சொந்த விஷயமாக இத்தாலி நாட்டிற்கு செல்ல முயன்றபோதும், எனக்கு தவறுதலாக வழங்கப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கையை காரணம் காட்டி என்னைத் தடுத்துவிட்டார்கள். எனவே நீதிமன்றம் எனக்கு நியாயம் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார் சிவசங்கரன்.