சென்னை:

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் முயற்சியின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கி உள்ளது.

சென்னை மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில், ரூ.65 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், வேலூர் மாவட்டம், ஜோலார் பேட்டையில் இருந்து நாள் தோறும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலம் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வந்தது.

அதன்படி, மேட்டூரில் இருந்து கூட்டுக் குடிநீர் குழாய் மூலம் பாலாற்றுக்கு வரும் நீரை, குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், ஏற்கனவே தயாராக இருந்த ரயில் பெட்டிகளில் நீர் நிரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து, இன்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவருவது குறித்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.  இன்றைய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தால், விரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருமுறை  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ரயில்வேக்கு  ரூ.8.60 லட்சம் கட்டணம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.