தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சிவகுமார் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் தனி பெறும் கட்சியாக தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது ஸ்டாலினின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.

முதலமைச்சர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம்ம மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும் காலையிலிருந்து மாலை வரைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா ஆக்ஸிஜன் இல்லை. ஆக்ஸிஜன் இருந்தா வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க.

ஆந்திரா, கர்நாடகம், கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த தாய் மொழிகளைப் படித்தே ஆக வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லும் அவலம் இங்கே மட்டுமே இருக்கிறது.

செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரோட வாரிசு நீங்க. இங்க, தமிழ் மொழியில பட்ட படிப்பு படிச்சவங்களுக்கு இங்க நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும்.

ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.