மும்பை

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.  ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களை சிபிஐ நேற்று முன்தினம் கைது செய்தது. இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ அலுவலகத்தில் மம்தா போராட்டத்தில் ஈடுபட்டார்.  நேற்று, ஆளுநர் ஜெக்தீப் தன்கரை மாற்றக் கோரி குடியரசுத் தலைவர், பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையையும் வன்முறைகளையும் தேர்தல் நடந்த போதிருந்தே ஆளுநர் மிகைப்படுத்திக் கூறுகிறார். வன்முறைகள் நடந்தபோது நிர்வாகம் எங்கள் கையில் இல்லை. இப்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. கொரோனாவை எதிர்த்துப் போரிடுவதில் மாநில அரசு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. மாநில அரசு நிர்வாகத்தில் வரம்பு மீறி தலையிட்டு மோதல் போக்கை ஆளுநர் ஜெக்தீப் தன்கர் கடைப்பிடிக்கிறார். மாநிலத்தின் நிர்வாக நலன் கருதி ஆளுநர் ஜெக்தீப் தன்கரை மாற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மம்தாவுக்கு ஆதரவாக மகாராஷ்டிரா ஆளும் கட்சியான சிவசேனா ஆதரவுக் குரல் எழுப்பி உள்ளது  சிவசேனா கட்சி மேற்கு வங்க ஆளுநர் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தது.  மேற்கு வங்க மாநில அளுநரின் செயல்பாடுகள் அம்மாநில அரசியலில் அசாதாரண சூழலுக்கு வழி வகிக்கிறது என்பதால் மேற்கு வந்த ஆளுநர் ஜெகதீப் தன்கரை மத்திய அரசு உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் எனக் கூறி உள்ளது.