மும்பை
முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய அளவில் கொரோனா பரவலில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக மும்பை நகரில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தினசரி பாதிப்பு இங்குக் குறைந்து வந்தாலும் மொத்த பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் இதுவரை 6.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு தற்போது சுமார் 32000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. ஆயினும் இந்த பணிகள் மும்முரமாக நடைபெறுவது இல்லை எனவும் இதனால் பாதிப்பு அதிகமாகி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மாநில அரசு இதற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்காததே காரணம் எனக் கூறி உள்ளது.
இது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடந்தது. அந்த விசாரணையில் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தத்தா, “தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் மத்திய அரசு ஏன் வீடு வீடாகச் சென்று முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாது? அதற்கான நடவடிக்கைகளை ஏன் மோடியின் பாஜக அரசு எடுக்கவில்லை?
மத்திய அரசிடம் அவ்வாறு எவ்வித கொள்கை முடிவும் இல்லையெனில் இதற்காக மும்பை மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எனவே நாளைக்குள் மும்பை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போட என்ன செய்ய உள்ளது என்பதை அறிவித்தால் அதை நடத்த அனுமதி அளிக்கிறோம்” என உத்தரவிட்டுள்ளார்