அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஸ்விசர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், முககவசங்கள் மற்றும் ரெமிடெசிவிர் மருந்துகள் என 40 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ உதவி பொருட்கள் இந்தியா வந்து சேர்ந்திருக்கிறது.
இதனை மாநிலங்களுக்கு இடையே பிரித்து வழங்குவதில் பிரிவினை மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக தி குய்ண்ட் இதழ் தெரிவித்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் இருந்து ஆந்திர பிரதேச மாநிலம் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துவருகிறது, குணமாகி வெளியேறும் ஒவ்வொரு நோயாளிக்கு பதில் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மருத்துவ உபகரணங்களின் தேவை இரட்டிப்பாகி இருக்கும் நிலையில், இங்குள்ள 350 நோயாளிகளுக்கு சொற்ப அளவிலான மருத்துவ உதவி பொருட்களே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தி குய்ண்ட் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு மருத்துவமனையான இதற்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 3000 ரெமிடெசிவிர் மருந்துகள் மற்றும் 50,000 முககவசங்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு 70 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், சிறிதளவு ரெமிடெசிவிர் மற்றும் முககவசங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு சொல்லிக்கொள்ளும் படியாக கணிசமான அளவுக்கு எந்த ஒரு மருத்துவ உதவிகளும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கு தேவையானவற்றை தெரிந்துகொண்டு பொருட்களை அதற்கேற்றாற் போல் அனுப்பிவைக்கவில்லை, மாறாக நிலையான வென்டிலேட்டர்கள் தேவைப்படும் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கையில் எடுத்துச்செல்லக்கூடிய போர்டபிள் வென்டிலேட்டர்களை கண்மூடித்தனமாக அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து 16 லட்சம் என்-95 முககவசங்கள் வந்திருக்கும் நிலையில், இவர்களுக்கு தேவையான என்-95 முககவசத்திற்கு பதிலாக சாதாரண மருத்துவ முககவசங்களை அனுப்பிவைத்துள்ளனர்.
இதுபோன்ற முறையற்ற செயல்பாடுகளால், மருத்துவமனையின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து போயிருக்கிறது.
500 முதல் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவுபடுத்த வேண்டும் என்ற மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையின் கோரிக்கை கிடப்பில் உள்ள அதேவேளையில், மருத்துவமனையில் புதிதாக கட்டப்படவிருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி கலன்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியா வந்தபோதும், மங்களகிரிக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.
லட்சக்கணக்கான மருத்துவ உதவி பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ளபோதும், அவை உரிய இடங்களுக்கு இதுவரை சென்று சேராமல் தேக்கமடைந்துள்ளன என்று தி குய்ண்ட் நடத்திய ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள விவரங்களில் தெரியவந்துள்ளது.