பெங்களூரு:  கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையான இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் . இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையின் கோரிக்கைக்கிணங்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

கடந்த 2023 சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இரு தலைவர்களுக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என காங்கிரஸ் மேலிடம் எட்டிய உடன்பாட்டின் அடிப்படையில் இந்த ஆட்சி மாற்றம் நிகழ்கிறது. டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கர்நாடகாவின் இரு முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை,  ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியூர் சென்றுள்ளதால், அவரது செயலாளரிடம்  வழங்கியுள்ளார்.

முன்னதாக, சித்தராமையான, இன்று காலை 9 மணி அளவில் தனது இல்லத்தில்  அமைச்சரவை சகாக்களுக்கு  சிற்றுண்டி விருந்து அளித்தார்.  அந்த காலை உணவு விருந்தின்போது, அமைச்சர்களுக்கு தனது ராஜினாமா முடிவை அவர் முறைப்படி அறிவித்தார்.  இந்த சந்திப்பின்போது, மாநில அரசியல் நிலவரங்கள் மற்றும் முதல்வர் மாற்ற முடிவு குறித்து அமைச்சர்களுக்கு விளக்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா,  காங்கிரஸ் கட்சியின் மேலிடம் 2 நாட்களுக்கு முன்பே என்னை பதவியில் இருந்து விலகுமாறு உத்தரவிட்டது. அதன்படி இன்று எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன். கர்நாடக மக்களுக்கு 2 முறை முதலமைச்சராக சேவை செய்ய வாய்ப்பளித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று கூறினார்.

பிரஸ் மீட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் பிரதமர் மோடியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த சித்தராமையா, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் உண்மையான முயற்சிகளை எடுத்துள்ளோம். எங்களது வார்த்தையை நாங்கள் மீறவில்லை. இது எனக்கும் எங்களது கட்சிக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது.

பிரதமர் மோடி உட்பட எதிர்க்கட்சியினர் என் மீது தவறான தகவல்களை பரப்பினர். இத்திட்டங்களால் மாநிலத்தின் கருவூலம் காலியாகிவிடும், வளர்ச்சிப் பணிகளுக்குப் பணம் இருக்காது என்றனர். ஆனால், இந்த உத்தரவாதத் திட்டங்களைச் செயல்படுத்திய பிறகும், வருவாய் ஈட்டுவதில் ஒட்டுமொத்த நாட்டிலேயே கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. ஜிஎஸ்டி வரி வசூலில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக நாம் 2-வது இடத்தில் இருக்கிறோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், காங்கிரஸிற்கு 135+1 என்ற முழு பெரும்பான்மை பலம் உள்ளது. இரண்டு சுயேச்சைகளும் ஆதரவு தந்துள்ளனர். எனவே, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுத்து ஆட்சி அமைப்பதில் எந்தச் சட்டப் சிக்கலும் இல்லை. எனக்கு அரசமைப்புச் சட்டம் தான் மதம், வாக்காளர்கள் தான் தெய்வம் என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசி விடைபெற்றார் சித்தராமையா. பதவி விலகலைத் தொடர்ந்து, அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க சித்தராமையா மாலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். டி.கே.சிவகுமாரும் இன்றிரவு டெல்லி சென்று மேலிடத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

சித்தராமையா ராஜினாமா செய்த செய்தி வெளியானதும், கர்நாடகா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ‘அகிண்டா’ அமைப்பினர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் அவரது இல்லத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள், அவரது வாகனத்தை மறித்து ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு கண்ணீர் மல்கக் கோஷமிட்டனர்.

சிவமோகா, யாத்கிர், கலபுரகி, ஹூப்ளி ஆகிய நகரங்களில் டயர்களைக் கொளுத்தியும், மனித சங்கிலி நடத்தியும் போராட்டங்கள் வெடித்தன. யாத்கிர் பகுதியில் ‘பீமு’ என்ற தீவிர ஆதரவாளர் ஒருவர் அதிர்ச்சியில் தீக்குளிக்க முயன்றார்; அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றினர்.

ஹூப்ளி பகுதியில் ராகுல் காந்தி மற்றும் டி.கே.சிவகுமாருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், டி.கே.சிவகுமாரின் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

[youtube-feed feed=1]