சென்னை

வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக தேர்வுகள் முடிந்தும் பல மாதங்கள் காத்திருக்க நேர்கிறது.

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று படித்து வருகின்றனர்.   இவ்வாறு வெளிநாடுகளில் படித்து விட்டு வரும் மாணவர்கள் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக சேர தகுதித் தேர்வு எழுத வேண்டும்.   ஆனால் கடந்த ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதம் நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு இன்னும் பயிற்சி மருத்துவர் பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இந்த தேர்வுகளை எழுத மருத்துவமனைகள் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தகுதி பெறுகின்றனர்.   இவர்கள் அனைவரும் இந்த தடையில்லா சான்றிதழின் அடிப்படையில் தமிழக அரசின் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மூலம் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த முறை மூலம் நேரடியாகப் பயிற்சி மருத்துவராக விரும்பும் பலருடைய ஆசைகள் நிறைவேறுவதில்லை.   பயிற்சி மருத்துவராகச் சேர இவர்கள் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.3.5 லட்சமும் மற்றும் அவர்கள் சேரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.2 லட்சமும் தர வேண்டி உள்ளது.

மிகச் சிறிய மதிப்பெண் வித்தியாசத்தில் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இழந்ததால் ஏற்கனவே ஏராளமாகச் செலவு செய்து வெளிநாட்டில் படித்து விட்டு வருவோருக்கு இது மிகவும் சுமையாக உள்ளது.  இந்த நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற மாநிலங்களில் அதிக பட்சமாக வெளிநாட்டில் பயின்ற மாணவர்களிடம், ரூ.1 லட்சம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.   இதைப் போல் தமிழகத்திலும் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  மேலும் இவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயிலும் போது எந்த ஒரு உதவித் தொகையும் அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

இந்நிலையில் தமிழக மருத்துவர் சங்கம் தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மருத்துவர்கள் தேவை அதிகரித்துள்ளதாகவும் ஆகவே வெளிநாட்டில் படித்த மாணவர்களைக் கட்டணம் வாங்காமல் பயிற்சி மருத்துவராகப் பணி புரிய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதே கோரிக்கையை வாசுதேவ நல்லூர் தொகுதியின் ம தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் சதன் திருமலைக் குமார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.