சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடையே உறுதிஅளித்தபடி, தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கு தனி துறை உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு செய்யப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது இதுவரை முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.