சென்னை

ன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்தியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், ஆக்ஸிஜன் படுக்கைகளும், ஆக்ஸிஜன் தேவைகளும் அதிகரித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பை மாநிலத்திலேயே செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.  இதன் ஒரு பகுதியாக  தற்போது மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறார்.

இன்று முதற்கட்டமாக அவர் காலை சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தைப் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து திருப்பூர் செல்லும் முதல்வர், அங்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

பிறகு கோவையில் ஆய்வு செய்யும் முதல்வர் அதிகாரிகளுடனும் மாவட்ட ஆட்சியருடன் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்,  பிறகு முதல்வர் கோவையில் இருந்து இரவு மதுரை சென்று நாளை அங்கு ஆய்வு பணிகளை ஆய்வு செய்துவிட்டு, திருச்சியிலும் ஆய்வு செய்ய இருக்கிறார், அதைத் தொடர்ந்து ஆய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு சென்னை திரும்ப உள்ளார்.