மதுரை: களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்படி, மதுரையில் இன்று 2வது நாளாக முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை உள்பட 5 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட  மக்கள் நலத்திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும், பொது மக்களின் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

முன்னதாக, மதுரை அரசு ஆய்வு மாளிகையில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காலை விமானம் மூலம் மதுரை சென்றார்.  நேற்று மாலை கீழடியில் கண்காட்சி அரங்கத்தை தொடங்கி வைத்து, அதை பார்வையிட்டதுடன், மேலும் அங்கு பல்வேறு செல்ஃபிக்களை எடுத்து மகிழ்ந்தார்.

அதைத்தொடர்ந்து? இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஐந்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த  கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.கஸ்டாலின், தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும் என கூறியதுடன்,  மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் தங்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. மனுக்களை பரிசீலித்து அவர்கள் உரிய  பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.  அதுபோல மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து முன்னுரிமையுடன் செயல்பட வேண்டும்.

மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட சிறப்பு தேவைகளை உணர்த்த திட்டங்களை வகுக்க வேண்டும் என வலியுறுத்தியவர், ஆட்சியர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்  என்றார்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன்,  விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மேலும்,  அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியவர், மக்கள் சான்றிதழ்களை கோரி விண்ணப்பித்தால், அதை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றவர், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உள்ளது என முதல்வர் கூறினார்.