சென்னை: நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் சர்ச்சை எழுந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளதும், சில இடங்களில் போலி நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள  13,47,033 கடன்தாரர்களில் 10,18,066 பயனாளிகள் தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  அதேசமயம் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என தகவல் வெளியானது. அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் 35,37,693 நகைக் கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நகைக்கடனுக்கு தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்களின்  நகைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதிலும் சிலர் பிரச்சினை செய்து வருவதால்,  நகைக்கடன் தள்ளுபடியில் தகுதி உள்ள நபர்கள் விடுபட்டு போயிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து நகைக்கடன் தள்ளுபடியைப் பெறலாம் என தமிழக அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில்,  கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வங்கி அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாக புகார்கள் வந்தன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி,  ஏழை மக்களிடன் வட்டியை செலுத்த வலியுறுத்த கூறி அதிகாரிகள் வலியுறுத்தக்கூடாது என்றும்,  நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் இருந்தும், வட்டி செலுத்த வலியுறுத்தக்கூடாது, மீறி வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.