மும்பை:மக்களை கவர்வதாக நினைத்த திமிர்பிடித்த ஆட்சியாளர்களை  மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் பதைபதைக்க வைத்துவிட்டது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்திருக்கிறது.

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் மண்ணை கவ்வும் என்று கருதப்பட்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் அப்படித்தான் தெரிவித்தன. ஆனால், அவை அனைத்தும் தவிடுபொடியானது. யாரும் நினைக்காத வகையில், காங்கிரஸ் கட்சி ஏறுமுகம் கண்டது.

பாஜக, சிவசேனா ஆட்சியை பிடித்திருந்தாலும், கூட்டணிக் கட்சியான சிவசேனா தேர்தல் முடிவுகள் வெளியான கணத்தில் இருந்தே பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக பார்க்க முடிகிறது. அது கட்டியம் கூறும் வகையில் தமது அதிகாரப்பூர்வமான சாம்னாவில் கட்டுரை ஒன்றை தீட்டியிருக்கிறது.

தேவந்திர பட்னவிஸ் பெயரிட்டு அழைத்த மகாஜனதேஷ் என்ற பிரச்சார முழக்கத்தை கடுமையாக சிவசேனா விமர்சித்திருக்கிறது. மாநிலத்தில் மகா ஜனதேஷ் என்பது இல்லை, தேர்தல் முடிவுகள் திமிர்பிடித்த ஆட்சியாளர்களை பதைபதைக்க வைத்துவிட்டது என்று கூறியிருக்கிறது.

முதலமைச்சர் பட்னவிஸ் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 200 தொகுதிகளில் மகா ஜனதேஷ் என்ற பெயரில் சூறாவளி பிரச்சாரம் செய்தார். தொழில் நுட்பங்களை தமக்கு சாதகமாக்கி கொள்வது, எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துதல் ஆகிய அம்சங்களை இந்த தேர்தல் முடிவுகள் நிராகரித்து இருக்கிறது என்றும் அந்த கட்டுரையில் பாஜகவை சீண்டியிருக்கிறது சிவசேனா.