230 தொகுதிகளுக்கான மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது.

இம்மாநில முதல்வராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் ம.பி. மாநிலத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைபெற்றுள்ளார்.

1972 ம் ஆண்டு தனது 13 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய இவர் அத்வானியின் விசுவாசியாக அறியப்பட்டார். தவிர, ஒரு கட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மோடிக்கே ‘டப்’ கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை பெருமைகள் இருந்தும் இந்தமுறை மீண்டும் பாஜக வெற்றிபெற்றால் இவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்று உறுதியுடன் கூறப்படுகிறது.

2005 முதல் 2018 வரை தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த சிவராஜ் சிங் சவுகான் 2020 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா உடன் வெளியேறிய 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தயவால் மீண்டும் முதல்வரானார்.

இதற்கு பிரதியுபகாரமாக ஜோதிராதித்ய சிந்தியா அல்லது தங்கள் சொல்படி நடக்கும் வேறு சிலரை முதல்வராக்க மோடி மற்றும் அமித்ஷா முயற்சி மேற்கொண்டு வருவதோடு பொதுக்கூட்டங்களிலும் இதனை சூசகமாக தெரிவித்து வருகின்றனர்.

அதற்காக மத்திய அமைச்சர்கள் சிலரை களமிறங்கியுள்ள அதேவேளையில் சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்த யசோதர ராஜே சிந்தியா வழக்கமாகப் போட்டியிடும் சிவபுரி சட்டமன்ற தொகுதியை ஜோதிராதித்ய சிந்தியா-வுக்கு விட்டுத் தர ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் கலக்கமடைந்துள்ள சிவராஜ் சிங் சவுகான் தனது சொந்த தொகுதியான புத்னி மக்களிடையே தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மோடி மற்றும் அமித்ஷா-வின் செயல்பாடுகளை அடுத்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்வதைக் குறைத்துக் கொண்ட சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராகும் கனவுடன் தன்னை மாமாஜி என்று அன்போடு அழைக்கும் புத்னி மக்களிடையே அதிகம் வலம்வந்து கொண்டிருக்கிறார்.