பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளிக்கொண்டுவந்தது.

ரூ. 7.5 லட்சம் கோடி அளவிலான இந்த ஊழலை வெளிப்படுத்திய சிஏஜி அறிக்கை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளை மத்திய அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.

இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் “பாஜக அரசின் ஊழலை மறைக்கவே இடமாற்ற நடவடிக்கை” என்று விமர்சித்துள்ளார்.

“மோடி அரசை அம்பலப்படுத்தும் எவரையும் மிரட்டி அச்சுறுத்துதல் அல்லது அவர்களை பதவியில் இருந்தே நீக்குதல் என்பதே பாஜகவின் தொடர் செயல்முறையாக உள்ளது.

பாஜக அரசின் ஊழல்களை யாரேனும் வெளிக்கொண்டு வந்தால் அவர்களை அச்சுறுத்தும் மாபியா போல மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் இத்தகைய நடவடிக்கைக்கான சமீபத்திய எடுத்துக்காட்டு 3 தணிக்கை அதிகாரிகளின் இடமாற்றம்.

சிஏஜி அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, துவாரகா விரைவுச் சாலை, பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் தொடர்பான மெகா ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உள்கட்டமைப்பு மற்றும் சமூகநலத் திட்டங்களில் நடைபெற்றுள்ள ஊழல்களை சிஏஜி அறிக்கை வெளிப்படுத்தியது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரே கைபேசி எண்ணில் 5 லட்சம் பயனாளிகளின் கணக்கு இணைக்கப்பட்டிருந்தது. துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் தவறான ஏல நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன.

பாஜக அரசின் அப்பட்டமான ஊழலை மறைப்பதற்காக நடைபெற்றுள்ள இந்த இடமாற்ற உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.