பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில்  இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுவும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு, பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் பதியப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெருமாள்கோவில் அரசு பள்ளியில் படித்து வரும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் சம்மந்தப்பட்ட இரு ஆசிரியர்கள்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து,  அப்பள்ளி ஆசிரியர் ராமராஜ் என்பவரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பரமக்குடி போலீசார்,  தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வலவனைதேடி வருகின்றனர்.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.