ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை : தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு

Must read

 

பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறை குறித்து தெரிவித்திருப்பதாவது :

மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்ய, அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்ய, ஒவ்வொரு பள்ளியிலும், “மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு” அமைக்கப்படும்.

இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர்கள் இரண்டு பேர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்ப பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறையை ஒருமாத காலத்தில் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும். இந்த கட்டுப்பாட்டு அறையை எளிதில் அனைவரும் தொடர்புகொள்ளும் வகையில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.

“மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு”விடம் வந்த புகார்களை உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தவேண்டும்.

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் அனைத்தும் உரிய வாழிகாட்டு நெறிமுறைகளுடன் வல்லுநர்களை கொண்டு விசாரிக்கப்படுவதுடன், அனைத்து தரவுகளும் பாதுகாக்கப்படும்.

ஆன்லைன் வகுப்பில் பங்குபெறும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணியமான உடை அணியவேண்டும். வகுப்பு நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்யவேண்டும். அந்த பதிவுகளை மாணவர் பாதுகாப்பு ஆலோசணை குழுவைச் சேர்ந்தவர்கள் குறித்த கால இடைவெளியில் ஆய்வு செய்யவேண்டும்.

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் புகாரையும் தெரிவிக்க ஆலோசணை பெட்டி ஒன்றை வைக்க வேண்டும்.

எழுத்துபூர்வமாக அல்லது வாய்மொழியாகவோ பெறப்படும் அனைத்து புகார்களையும் தனி பதிவேட்டில் குறிப்பிடவேண்டும்.

பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சில சிறப்பு நடைமுறைகளை உருவாக்கும்.

போக்சோ சட்டம் குறித்தும் பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறைச்சியை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ‘குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரமாக’ கடைபிடிக்கப்படும்.

இந்த வழிகாட்டுதல்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

More articles

Latest article