கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயில டிஜிட்டல் வசதி கோரி வழக்கு! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Must read

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயிலும் வகையில்  டிஜிட்டல் வசதி செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அரசும் கல்வித்தொலைக்காட்சி மற்றும் மொபைல் மூலம் கல்விச்சேவை வழங்கி வருகிறது. ஆனால்,  கிராமப்புறங்களில் போதிய அளவுக்கு டிஜிட்டல் வசதி இல்லாததால், கிராமப்புறங்களில்  உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் அதை எதிர்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு உதவியாக வேலைக்குச் செல்கின்றனர். அதைத் தடுக்க கிராமப்புறங்களில் ஒவ்வொரு தெருக்களிலும், மாணவர்கள் கல்வி பெற ஏதுவாக ஆன்லைன் டிஜிட்டல் ஏற்பாடுகளை மேற்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த தகுதியான ஒருவரை நியமித்துக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய மாவட்ட, தாலுக்கா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுகுறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

More articles

Latest article