சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த கேள்மபாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கொடுத்த புகாரின்பேரில், அவர்மீது வழக்குபதிவு செய்து, போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது,   சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்கக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அத்துடன் அவரது பெண்  பக்தைகள் பாரதி, தீபா மற்றும் சுஷ்மிதா ஆகிய நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 59 நாட்களில் மிக விரைவாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிகையில்,  சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் 30 முன்னாள் மாணவிகளை  சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும்,  விடுதியில் இருந்த மாணவிகளை மூளைச்சலவை செய்து சாமியார் சிவசங்கர் பாபாவின் பாலியல் இச்சைக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது சந்தேகமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.