சென்னை: நாளை 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை  கோட்டையில் 5அடுக்கு பாதுகாப்பும், ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு உள்பட பேருந்து நிலையங்கள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்பு தீவரப்படுத்தப்பட்டு உள்ளது.

சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ளலாம். எனவே, அனைத்து மாநில போலீஸாரும் உஷார் நிலையில் இருக்கும்படி மத்திய உளவுத் துறை மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. இதையடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது மட்டும் அல்லாமல் முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக 13 கடலோர மாவட்டங்களிலும் கடலோரக் காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறை அறிவித்து உள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நாளை  கொடி ஏற்றும், கோட்டை கொத்தளத்தை சுற்றி 5 அடுக்கு வளையம் போடப்பட்டு உள்ளது. கோட்டை முழுவதும், நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில், கூடுதல் காவல் ஆணையர்கள் என்.கண்ணன் (தெற்கு), செந்தில் குமார் (வடக்கு), பிரதீப் குமார் (போக்குவரத்து) தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா முடியும் வரைகோட்டையைச் சுற்றி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் சுதந்திர தின கண்காணிப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு 6 ஆயிரம் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர தமிழகம் முழுவதும் முக்கிய சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அணு உலை அமைந்துள்ள இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.