திருச்சி: வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் திருச்சி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின்  ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடுமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிக அளவில் லஞ்சம் நடைபெறும் இடமாக சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை, தங்களது சொத்து தொடர்பான விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் புதிய பதிவுகளுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களையே சார்ந்து இருக்க வேண்டியது உள்ளது. இதை அங்கு பணியாற்றும் சாதாரண ஊழியர் உள்பட சார்பதிவாளர் என அனைவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, லஞ்சம் என்ற பெயரில்  அப்பாகி மக்களை துன்புறுத்தி  பணத்தை வாரி குவித்து வருகின்றனர்.  லஞ்சம் வாங்காமல் எந்தவொரு பணிகளும் நடைபெறுவது இல்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிகோய் விட்டது.

இநத் நிலையில்தான் முன்னாள்   சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அவர்களின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

முன்னாள்   சார்பதிவாளர் ஜானகிராமன் 1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாள ராக  பணியாற்றியுள்ளார்.  இவர் பணிபுரிந்தபோது, பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி குவித்துள்ளார். இதன்முலம்,  வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி பெயரிலும்  சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த  2001 ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிமன்றம், சார்பதிவாளர் ஜானகிராமனையும், அவரது மனைவியையும் குற்றவாளி என உறுதி செய்தது.

அதன்படி, முதல் குற்றவாளி ஜானகிராமன் மற்றும் இரண்டாம் குற்றவாளியான வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.  மேலும் குற்றவாளிகள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும்உத்தரவிட்டார்.