சென்னை:  இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்பட்ஜெட், மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என்று, பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக வேளாண் அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டப்பேரவை கூட்டம் நேற்று (ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி  செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாள் சட்டசபை கூட்டத்தில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, இன்று முதன்முதலாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  கோபாலபுரம் இல்லம் சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து, அவருடன் இணைந்து வந்து சட்டப்பேரவையில் வேளாண்பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை என்று கூறி பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு வேளாண் பட்ஜெட் உருவாக்கப்பட்டது. விவசாயிகளின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண்துறையை சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், உணவு தன்னிறைவைத் தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது, இருந்தாலும்,  உணவுப்பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.