சென்னை:  தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் உள்பட முக்கிய அம்சங்கள்  மற்றும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட், மத்தியஅரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என்று, அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும்,  உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், வேளாண்துறையில்உள்ள  சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், உணவு தன்னிறைவைத் தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது, இருந்தாலும்,  உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்களுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 10 லட்சம் எக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் எக்டராக உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டு உள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டம் முதற்கட்டமாக 2500 கிராமங்களில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே.  அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட, அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைப்பது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்.

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் – ரூ.146.64 கோடி செலவில் நடைபெறும்.

பனை மேம்பாட்டு இயக்கம் -ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி,  30 மாவட்டங்களில் 76 லட்சம் பனைவிதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் விநியோகம் செய்யப்படும். தமிழகத்தில் பனைமரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை வளர்ச்சித்திட்டம் – ரூ.33 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் – ரூ.25 லட்சம் ஒதுக்கீடு.

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் – ரூ.2.68 கோடி ஒதுக்கீடு.

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் – 2500 இளைஞர்களுக்கு பயிற்சி.

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் – ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நீடித்த நிலையான பருத்தி இயக்கம் – ரூ.16 கோடி ஒதுக்கீடு

ஏற்றம் தரும் எண்ணெய் வித்துகள் திட்டம் – ரூ.25.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.