சென்னை

லாத்கார குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் மற்றும் பலாத்கார குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.   இதற்காகக் கைது நடவடிக்கைகள் வழக்குப் பதிவு ஆகியவை உடனடியாக நடந்த போதிலும் வழக்கு வெகுநாட்கள் இழுத்தடிக்கப்படுகிறது.  இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கடும் உளைச்சலை அளிக்கிறது. 

இன்று இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தன்னை கடவுள் அவதாரம் என கூறிக் கொள்ளும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்கிற புகாரின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலத்தில் வெளிவரும் இத்தகைய குற்றங்கள், பள்ளிகளில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை வெளிக் கொண்டு வருகிறது.   இந்த தகவல்கள்  பெற்றோர்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்தை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  சிவசங்கர் பாபா அதிகாரப் படிநிலையின் உச்சியில் இருப்பதால் தண்டனையிலிருந்து தப்புவதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்.

சிவசங்கர் பாபா வெளியே இருப்பது வழக்கைச் சீர்குலைக்கவே உதவும். இதற்கு எடுத்துக்காட்டாகப் புகார் வந்தபின் இவர் மேற்கொண்ட தலைமறைவு வாழ்க்கையைக் கூறலாம். குறிப்பிட்ட கால வரையறைக்குள் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விரைந்து முடிக்கப்படுவதற்கான முயற்சிகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து கல்வி நிலையங்களிலும், பணியிடங்களிலும் பாலியல்  துன்புறுத்தல் புகார் குழு அமைக்கப்படுவதை மாநில அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த கொடுமைகள் தனியார் நடத்தும் சர்வதேச பள்ளிகள் துவங்கி அரசு நடத்தும் கிராமப்புற பள்ளிகள் வரை பல்வேறு இடங்களில் தொடர்கின்றன.

இத்தகைய சூழலில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரிடமும் விவாதித்து தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.