டில்லி

பிரதமர், ஜனாதிபதி, மற்றும் துணை ஜனாதிபதி பயணம் செய்வதற்காக புதியதாக 2 விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர், ஜனாதிபதி, மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் தற்போது உள்நாட்டில் விமானப் படை விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்.    வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏர் இந்தியாவின் தனி விமானத்தில் பயணம் செய்கின்றனர்.   இதற்கான வாடகையை அரசு அளித்து வருகிறது.

தற்போது பிரதமர்,  ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் பயணம் செய்ய 2 புதிய விமானங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.    இதற்காக இரு போயிங் 777-300 ERS விமானங்களை வாங்க உத்தேசித்துள்ளது.   இந்த விமானங்களில் ஒரு கலந்தாய்வு அறை, ஒரு அவசர சிகிச்சை அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளன.    அத்துடன் வை-ஃபை வசதியும், ஏவுகணையிடம் இருந்து பாதுகாக்கும் உபகரணங்களும் இந்த விமானத்தில் அமைக்கப்பட உள்ளது.

இந்த விமானங்களுக்காக வரும் நிதி ஆண்டில் ரூ.4,469.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.   இந்த விமானங்கள் முந்தைய போயிங் 747 போல இல்லாமல் வெகு தூரம் பறக்கும் சக்தி உடையதாக அமைவதால்  இடையில் எங்கும் எரிபொருள் நிறப்புவதற்காக  நிற்காது.   இந்த விமானங்கள் அமைக்கும் பணி 2020க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.