டில்லி:

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சிபிஐ.க்கு போன் செய்யுங்கள் என்று கார்த்தி சிதம்பரம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். 12 நாள் சிபிஐ காவலுக்கு பின்னர் இன்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 24ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ எனக்கு பசி எடுக்கவில்லை. அதனால் குறைவாக தான் சாப்பிடுகிறேன். இதனால் எனது உடல் எடை குறைந்துள்ளது. இது நல்லது தான். எனக்கு புதிய ஆடைகள் தேவைப்படுகிறது. பழைய ஆடைகள் எல்லாம் லூஸாகிவிட்டது. அதனால் யாரேனும் எடை குறைக்க வேண்டும் நினைத்தால் அவர்கள் சிபிஐ.யை அழைக்கலாம்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

கார்த்தி சிதம்பரத்தின் செல்போன் அழைப்புகள் பதிவு செய்யப்படுகிறது. உண்மை கண்டறியும் சோதனை அவருக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. சிபிஐ காவலில் இருந்தபோது போன் பேச அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கை கடிகாரம் கூட இல்லை.

‘‘இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் வழக்கமாக அதிகாரிகளிடம் மணி எத்தனை? என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்’’ என்று கார்த்தி சிதம்பரம் தனது வக்கீல்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், சிபிஐ அதிகாரிகள் மீது அவர் எவ்வித புகாரையும் அளிக்கவில்லை. என்னை கண்ணியத்துடன் நடத்தினர் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சர். அவர் பல தீவிரவாதிகள் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். அவரால் தண்டனை பெற்றவர்கள் திகார் சிறையில் உள்ளனர். அதனால் என்னை சிறையில் கழிப்பிடத்துடன் கூடிய தனி அறையில் அடைக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சுனில் ரானா, சிறையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ப.சிதம்பரம் மகன் என்பதால் சிபிஐ காவலில் இருந்தபோது அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.