டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பான உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில்பாலாஜி தரப்பு இன்றுக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது புழல் சிறையில் உள்ளார். இதற்கிடையில், அவரது மனைவி ஆட்கொண்ர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கு விசாரித்த நீதிமன்றம், அவரது கைது செல்லும் என உத்தரவிட்டது. கசெந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும்  நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

இதை எதிர்த்து செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது, அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படிக் கைது செய்ய முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஒருவரிடம் விசாரணை செய்து அதன் மூலம் வாக்குமூலத்தை பெற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். அமலாக்கத்துறையால் நேரடியாகக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?  சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா?  காவல்துறையினர்தான் கைது செய்ய முடியும் என கபில் சிபல் வாதிட்டார்.

புகார்தாரர் அளித்த விவரங்களையே ஆதாரங்களாக முன்வைத்த பிறகு, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேறு என்ன உள்ள? தேவைப்பட்டால் சிறைக்குச் சென்று குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கலாமே தவிர, அமலாக்கத்துறை காவல் கோருவது முறை ஆகாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. சட்டத்தில் இல்லாததை அமலாக்கத்துறையினர் கோர முடியாது, வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வாதங்களை இன்றைக்குள்  நிறைவு செய்யும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.