குற்றம் கடிதல்: 2
னிதன் வன்மம் கொண்ட மிருகமாகி விட்டான். அவனது வன்மத்தின் முன் வன விலங்குகள் மண்டியிட்டுக் கெஞ்சும் நிலை உருவாகி வருகிறது.
மனிதன் வன உயிர்களைத் திருடர்களைப் போல விரட்டியடிக்கிறான். மனிதன் வன விலங்குகளைக் கொள்ளையர்களைப் போல சுட்டு வீழ்த்துகிறான். பாவம், அந்த அப்பாவி உயிர்கள் எதற்காகப் பலியாகிறோம் என்பது கூடத் தெரியாமல் பலியாகின்றன. காட்டு யானை மதுக்கரை மகாராஜாவின் துர் மரணத்தால் வனம் அதிர்கிறது. அந்த அதிர்வுகள் அடங்குவதற்குள் இன்னொரு காட்டுயிரான பிருமாண்ட யானை தானாகவே ரயிலில் அடிபட்டு இறந்துள்ளது.
தமிழகம் கானுயிர்களின் கல்லறையாக மாறி வருகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 41 யானைகள் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 36 மரணங்கள் எதிர்பாராத தருணங்களில் நிகழ்ந்தவை. கோவை மாவட்டத்தில் மட்டும் ஆறு ஆண்டுகளில் 69 மரணங்கள் நடந்துள்ளன.
இந்தியாவிலேயே யானைகள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதி வால்பாறை மலைப்பகுதிகள் ஆகும். ஆனால் இந்த வன உயிர்களைப் பாதுகாக்க உரிய முக்கியத்துவம் அளிக்காமல் காடுகள் அழிக்கப்பட்டு வருவதே இதற்குக் காரணம் என்று வன உயிரின ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக இது போன்ற நிகழ்வுகளையும் இழப்புகளையும் மனிதன் – வன உயிர்கள் மோதல் என்று அழைக்கிறார்கள். ஏதோ வன உயிர்கள் நாட்டுக்குள் வந்து மனிதனுடன் சண்டையிடுவதைப் போன்று இவ்வாறு பெயரிடுவதே முதலில் அபத்தம்.
மனிதன் தன் பேராசையால் வனத்தை அழித்துக் கொண்டே போகிறான். அதனால் தங்கள் வாழிடம் அழிவது தெரியாமலேயே கானுயிர்கள் மனிதனிடம் மாட்டிக் கொள்கின்றன.
காடுகள் அழிப்பு எதனால் ஏற்படுகிறது?
முதலில் வனங்களைச் சுற்றியுள்ள பகுதியை மனிதன் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்துகிறான். பின் படிப்படியாகச் சில இடங்களில் விவசாயம் செய்கிறான். இதுவரையிலும் பரவாயில்லை. இதனால் வனப் பகுதிக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் அம் மனிதர்கள் அப்பகுதிகளில் நீண்ட காலமாக வசிப்பதால் வனங்களின் நிலைமை, வன உயிர்களின் நடமாட்டம் ஆகியவற்றை உணர்ந்தவர்கள்.
ஆனால் காடுகள் அழிப்பு நிறுவன மயப்படுத்தப்படும்போதுதான் பெரிய அளவில் வன அழிப்பு தொடங்குகிறது. இதில் முதல் இடம் வகிப்பவை அரசுத் திட்டங்கள். வளர்ச்சி என்ற பெயரில் வனப் பகுதிகளில் சாலைகள் அமைப்பது, ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பது, மின் கம்பங்கள் நடுவது என்ற பெயரில் ஆரம்பிக்கின்றன அரசு நடவடிக்கைகள்.
இப்போதும்கூட பெரிய அளவில் வன உயிர்கள் மோதல்கள் நடந்ததில்லை என்பதை 20 ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்களைப்  பார்த்தால் தெரியும். இப்போதெல்லாம் அன்றாடச் செய்தியாக வன உயிர்கள் இழப்பு, முன்பெல்லாம் அத்தி பூப்பது போல அபூர்வ செய்தியாக இருந்தது.

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

அடுத்தது நாட்டின் எரிபொருள் தேவையைச் சமாளிப்பதற்காகக் காட்டு மரங்கள் வெட்டப்படுவது. இவ்வாறு ஆண்டுக்கு 25 கோடி கனமீட்டர் மரங்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுவதாகவே அகில இந்திய கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இதற்காக மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அடுத்ததாக, கட்டுமானங்கள் மற்றும் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்குத் தேவையான மரச் சாமான்களுக்காக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. இதனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்குகளுக்கும் அதிகமாக மரங்கள் வெட்டப்படுவதாக இந்திய வன சர்வே கூறுகிறது. குறிப்பாக உலக மயமாக்கல் அமலாக்கம் தொடங்கியதில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பெரும் பசியுடன் மரங்கள் வேட்டையாடப்படுகின்றன.
அடுத்ததாக ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதை போல மனிதன் வனங்களை அழித்துத் தொழிற்சாலைகள் அமைக்கத் தொடங்கினான். குறிப்பாக வனப் பொருள்களை மூலப்பொருளாகக் கொண்ட ரெசின், டர்ஃபன்டைன் ஆயில் ஆலைகள் வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டன. இதனால் அரிய வன உயிர்களான மெல்லிய பறவைகள் போன்ற உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தன.
இப்போது பொழுதுபோக்கு, மனமகிழ்ச்சி போன்றவைகளும் தொழிலாகி விட்டதால் வனங்களை அழித்து விடுதிகள், தங்குமிடங்கள், ரிசார்ட்டுகள், ஓய்வில்லம், விருந்தினர் இல்லம் என்ற பெயரில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் ரம்யமான சூழல் வேண்டும் என்பதற்காக பிரும்மாண்டமான ஆசிரமங்கள், மருத்துவமனைகள், மெகா கல்வி மால்கள் கட்டப்படுகின்றன. இதற்காக சாலை வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன. குறிப்பாக ரிசார்ட்டுகள், ஓய்வகங்கள் என்ற பெயரில் மலைகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. ஈஷா யோகா மையத்தில் துவங்கி, இந்தியாவின் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களான அமிர்தா, காருண்யா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள், ரிசார்ட்கள் என நீள்கிறது பட்டியல்.
இவ்வாறு ஆண்டுதோறும் நாடு முழுவதும் 35 லட்சம் ஏக்கர் வனங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்று எச்சரிக்கிறது ஒரு அறிக்கை. இந்தியாவில் வனப்பகுதி சராசரி 23 விழுக்காடு என்றால் தமிழகத்தில் அது 17 விழுக்காடாகச் சரிந்துள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் தர்மபுரி வரை வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டங்கள் 12. இங்கு 4 புலிகள் சரணாலயங்கள், 3 யானைகள் சரணாலயங்கள், 5 தேசிய வனப் பூங்காக்கள் உள்ளன. இதில் பத்து மாவட்டங்கள் கேரள, கர்நாடக வனப் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளன.
வன உயிர்கள் தங்களை அழிவிலிருந்து காத்துக் கொள்ளவும் வனங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணவும் வலசைகள் செல்வது இயல்பு. அவ்வாறு தமிழக வன உயிர்கள் அருகிலுள்ள கேரள, கர்நாடக வனப்பகுதிகளுக்கு ஆண்டில் பல முறை வலசை செல்கின்றன.
அப்பணசாமி
அப்பணசாமி

மேற்கூறிய வன அழிப்புகளால் அந்த வன உயிரினங்களின் பாதைகள் அழிக்கப்படுவதால் அவை தடுமாறுகின்றன. உணவு, நீர் கிடைக்காமல் தத்தளிக்கின்றன. வன விலங்குகளுக்குத் தெரியுமா அது வயலா, புதரா என்று? தங்கள் வயிற்றுப்பாட்டுக்கு அவை மேய்கின்றன. மனிதன் போட்ட மின் வலையில் சிக்குகின்றன. தண்டவாளங்களில் அடிபட்டு மடிகின்றன. வாய்ப்பு கிடைக்கும்போது தங்கள் எதிர்ப்பினைக் காட்டுகின்றன.
யானைகள் வலசை செல்லும் பாதைகள்தான் பிற விலங்குகளுக்குமான பாதைகளாகின்றன. இதனால் யானைகள் போன்று புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருதுகள், கரடிகள் என தொடர்ந்து பலியாகி மனிதன் – விலங்குகள் மோதலில் பலி அல்லது அட்டகாசம் செய்த புலியைச் சுட்டு வீழ்த்திய வீரர்களுக்குப் பாராட்டு, 13 அடி நீள மலைப்பாம்பு வீட்டுக்குள் புகுந்தது என்று ஊடகச் செய்திகளாகின்றன. ஆனால் தாம் இவ்வாறு அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டு பலியாடுகளாகக் கொல்லப்படுகிறோம், அவமானப்படுத்தப்படுகிறோம் என்று அறியாமலேயே அந்த உயிர்கள் பலியாகின்றன.
ஆனால், வனங்களைப் பாதுகாக்க, கானுயிர்களின் சுயமரியாதையை மதிக்க, மலைவாழ் மக்களின்  வாழ்வுரிமையைப் பாதுகாக்க எந்த அரசியல் கட்சியும் இன்னமும் முன் வரவில்லை என்பது துயரமானதுதான்.
(மீண்டும், வரும் செய்வாக்கிழமை சந்திப்போம்.)