குற்றம் கடிதல்: 3

சுவேதா
சுவேதா

 
ந்த மாபெரும் சென்னை மாநகரின் விடியல் என்பது மிகவும் அழகானது. குறிப்பாகப் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் அதிகாலையிலேயே உழைப்புக்குக் கட்டியம் கூறி தயார் நிலையில் காத்திருக்கும். ரயில்களும் பேருந்துகளும் மாநகரச் சேவல்களாகக் கூவிக் கூவி எழுப்பும். பன்னாட்டு நிறுவனங்களும் அழைப்பு மையங்களும் நகரில் பெருகிய பிறகு நள்ளிரவிலும்கூட கேப்களில் பெண்களும் ஆண்களும் பணி முடிந்து திரும்புவதும், புறப்படுவதும் சென்னையைத் தூங்கா நகரமாக்கியது. இவ்வாறு நள்ளிரவிலும் விடியலுக்கு முன்பும் பெண்கள் வேலைக்குச் செல்வதும் திரும்புவதும் இது ஒரு பாதுகாப்பான நகரம் என்பது போலக் காட்டிக் கொண்டது கூட ஒரு மாயத் தோற்றந்தான் போலும்.
சுவாதியின் தந்தையும் இவ்வாறு நம்பித்தான் வெள்ளியன்று அதிகாலையில் தன் மகளைப் பணிக்குச் செல்ல அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆறு மணிக்கு அவரை இறக்கி விடும்போதும் அதே நம்பிக்கையில்தான் வீடு திரும்பியிருப்பார். தங்கள் செல்ல மகள் குறித்து எத்தனை கனவுகள் அந்தப் பெற்றோருக்குள் பொதிந்திருக்கும்?
அப்பெண் அவர்களின் மகள் மட்டும்தானா? நம் மகள் இல்லையா? என் மகள் இல்லையா? நம் சகோதரிகள் இல்லையா? அப்படி நினைத்திருந்தால் அவள் நம் கண்களுக்கு முன்பாகவே கழுத்தறுபட்டுக் கதறும்போது அடுத்த ரயில் எப்போது வரும் என்று தண்டவாளத்தில் வைத்த கண்ணை மாற்றாமல் நின்றிருப்போமா? அவள் கதறக்கூட இல்லை. அபயக்குரல் இட்டிருக்கிறாள். நமது காதுகளும் சேர்ந்தே மூடிக் கொண்டன.
நமது என்றால் யார்? பொதுப் புத்தியில் நாம், நமது என்றால் நானும் என் குடும்பமும் என்பதை வலுக்கட்டாயமாகத் திணித்துக் கொண்டிருக்கிறோம். அதே ரயில் நிலையத்தில் அவளுடன் ரயிலுக்காகக் காத்திருந்தவர்கள் அவளது சக பயணிகள்; சக ஊழியர்கள்; தந்தைமார்; சகோதரர்கள்தான்! ஆனால் அவர்களின் நமது என்ற அடையாளத்துக்குள் அவள் வரவில்லை! இல்லாவிட்டால் ஒற்றை நபர் அவளது கழுத்தை அறுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா?
இந்தச் சமூகத்தில் நமக்கு நாமே பாதுகாப்பு! அண்டை வீட்டுக்காரரை விட, சக பயணியை விட யார் நமக்குப் பாதுகாப்பாக இருக்க முடியும்? அபாயமான நேரத்தில் உறவினர்கள் வருவதற்கு முன் காவலர்கள் வருவதற்கு முன் முதலில் ஓடி வந்து காப்பாற்றுபவர்கள் அவர்களாகத்தானே இருக்க முடியும். ஆனால் சக பயணிகளான, சக ஊழியர்களான, அவளைப் போன்ற ஒரு பெண்ணின் தந்தையரான, சகோதரரான நாம், ஒரே ஒரு நபர் அவளது கழுத்தை அறுத்து ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்போது பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.
நானாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேனா? அடுத்த நடைமேடையில் இருந்த கடைக்காரர் ஓடி வந்தாரே அதுபோல நாமும் ஓடிச் சென்றிருந்தால் குற்றுயிரும் குலையுயிருமாகவாவது அவளைக் காப்பாற்றி இருக்க மாட்டோமா?
இதற்காக அரசையும் காவல்துறையையும் குறை சொல்வது நியாயமா? அவர்களுக்கு இதுவா வேலை! திரைகடல் ஓடி, ஓடிப் பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து இங்கே சேர்த்துக் கொண்டிருக்கிறார் பிரதமர். அதற்காக அப் பன்னாட்டு நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு என்ன பாதுகாப்பு அளிக்கிறது என்பதைக் கேட்பதா அரசின் வேலை? காவல்துறைக்கும் இதுவா வேலை? அதிகாரத்தில் உள்ளவர்களின் பாதுகாப்புக்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை!
ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

இரண்டாண்டுகள் முன் இதே போன்று சிறுச்சேரி அருகே நமது சகோதரி ஒருத்தி கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பேற்றார்கள்? அரசு பொறுப்பேற்றதா? காவல் துறை பொறுப்பேற்றதா? இது போன்று வேலைக்குச் சென்று வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையுள்ள அரசுத்துறைகள் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?
நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் அவளது உடல்  கழுத்தறுபட்டு இரண்டு மணி நேரம் கிடந்திருக்கிறது. ஆனால் அந்த உடலில்  உயிர் ஊசலாடிக்கொண்டாவது இருக்கிறதா என்பதைப் பார்க்கக்கூட நாதியில்லை.
அந்த ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர்களே இல்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? ரயில்களின் பாதுகாப்பு, பயணிகள் பாதுகாப்பு என்று ரயில்வே நிர்வாகம் அடிக்கடி கூறுவது வெறும் வார்த்தை அலங்காரமா? சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா? போதிய காவலர்கள் இல்லாமல் பயணிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது எப்படி? இப்போது என்ன செய்யப் போகிறார்கள் தெரியுமா? யாரோ ஒரு இளநிலை அதிகாரியைப் பலிகடாவாக்கி நடவடிக்கை எடுத்து மொத்தப் பழியையும் அவர் மீது சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொள்ளப் போகிறார்கள். இதுபோன்ற ஒவ்வொரு விபரீதத்துக்குப் பிறகும் இதுதானே நடக்கிறது?
அந்த ரயில் நிலையத்தில் ஒரு சிசிடிவி கேமராகூட கிடையாது என்பதைத் தெரிந்துதான் கொலையாளி அந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கிறான் என்றால் அந்தப் பாதுகாப்புக் குறைபாட்டுக்குக் காரணமான அதிகாரிகள் மனம் சற்றும் படபடக்கவில்லையா? யாருக்காவது இது விஷயத்தில் குற்ற உணர்வு இருக்கிறதா? தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திளைக்கிறது என்று கூறுபவர்கள்  ரயில் நிலையங்களுக்குள் வந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்பை எத்தனை முறை உறுதி செய்துள்ளார்கள்?
மூன்று வயதில் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டு படி, படி, படி, மதிப்பெண், மதிப்பெண், மதிப்பெண் என்று இருபது ஆண்டுகள் மதிப்பெண்களுக்கு அடிமையாக இருந்து அதிக மதிப்பெண் பெற்று கல்வி முடியும் முன்பே வளாக நேர்காணலில் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்குத் தேர்வாகி, பெற்றோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, உடனடியாகப் பணிக்குச் சேர்ந்து காலையில் 4, 4.30 மணிக்கு எழுந்து தயாராகி 6 மணிக்கு ரயில் பிடித்து 8 மணிக்கு மறைமலை நகரில் இறங்கி 8 மணி நேரமோ 10 மணி நேரமோ உழைத்து மீண்டும் ரயில் பிடித்து இரவு 9 மணிக்கு வீடு திரும்பி 10 மணிக்கோ, 11 மணிக்கோ படுக்கைக்குச் சென்று மறுநாள் காலையில் 4 மணிக்கு எழுந்து கடிகார முள் போல் சுழன்று ஒரு நாள்கூட தனக்காக வாழ்ந்திராத ஒரு பெண்ணைத்தான் நாம் கொலை செய்திருக்கிறோம்.
இரண்டு நாட்கள் ஆனாலும் கொலையாளி குறித்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஏன் இந்த மெத்தனம் என்று யாராவது கேட்கிறோமா? ஏனென்றால் கொலையுண்டது நம் மகளோ சகோதரியோ கிடையாது. அது நமது உறவுப் பெண்ணாக இருந்தால் இதற்குள் தொலைக்காட்சி ஒலி வாங்கிக்கு முன் கதறியிருப்போம், காவல்துறை என்ன செய்கிறது? அரசு என்ன செய்கிறது என்று கழுத்து நரம்புகள் தெறிக்க நமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்போம்.
அதனால் பொழுதுபோக இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? வெறும் வாய்க்கு அவல் கிடைக்காதா என்று அப் பெண்ணின் தனிப்பட்ட தகவல்களை தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறோம்.
சுவேதி தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன்
சுவேதி தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன்

24 வயதுப் பெண்ணை ஒரு 25 வயது இளைஞன் கொலை செய்திருக்கிறான் என்றால், அவர்களுக்குள் ’ஏதாவது இல்லாமலா’ இருக்கும் என்ற கேவலமான ஆராய்ச்சிகளை நடத்தத் தொடங்கியிருக்கிறோம்
உலகில் கொலையுறுபவர்கள் பெண்ணாக, ஆணாக, குழந்தையாக, முதியோராக, திருநங்கையராக, பிச்சைக்காரராக, கோடீஸ்வரராக என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கொலையாளிகள் 90% பேர் ஆண்களாகத்தானே இருக்கிறார்கள்?
அடப்பாவிகளா? ஏற்கனவே கொலை செய்யப்பட்டு விட்ட ஒரு பெண்ணை ஏன் மீண்டும் மீண்டும் கொலை செய்கிறீர்கள்?
வெட்கமாகவும் வேதனையாகவும் கையாலாகத்தனமாகவும் இருக்கிறது!