கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 39

பா. தேவிமயில் குமார்

இதுவே அன்பின் அடையாளம்

*திரையில் தெரிவது
நடிப்பென, தெரிந்துமே
கண்ணீர் சொரியும் கண்கள்!

*கூரிய கொலைக்ருவி முனையை ,
ஒரு நிமிட அன்பு
துருப் பிடிக்கவைக்குமே!

*பாதையின் வெண் கோடுகளை
பாயென சுருட்டும்
சக்கர அன்பாய்
சில அன்பு நீளமானது,!

*பிட்டுக்கு மண்ணும்,
பாருக்கு சிலுவையும்,
உண்டான நிகழ்வை
அன்பன்றி வேறென்ன சொல்ல?

*கழிவிரக்கத்தின் அன்பை
மூன்றாவது கண்
மட்டுமே உணர இயலும்!

*சதுரங்க கட்டமாக
அன்பு….
என்றுமே மாறாமல்!
அறியாமல்… அதன் மீதே..
நம் நவரசங்களின்
ஆட்டம்!

*யானையோ? பூனையோ?
அன்பு
யாரிடமிருந்து வந்தாலென்ன?
அனுபவித்து மகிழ்வோம்!

*அனைத்து கவலையையும்
அடை காக்கும்
தாய்ப்பறவையாக
அன்பு இருப்பதை
யாரறிவார்?

*வழு வார்த்தையில் கூட
அகப்பட்டிருக்கும் கெழுவான
அன்பினை அறிவோர்
மட்டுமே மனிதர்!

*உண்மையான அன்பை
ஆடியோ, பாடியோ
விளம்பரப்படுத்திட வேண்டியதில்லை!

*ஆண்டவனையே ஒதுக்கி
விட்ட ஏவாளுக்கு,
ஆதமின் அன்பு அடையாளமானது!

*பகலில் ஒளி,
இரவில் இருள்….
இதில் மாற்றமில்லையே!
அப்படியானால்
அன்பு மட்டும் மாறுமா என்ன?

*பஞ்ச பூதமினியில்லை!
ஆறு பூதங்கள்
உலகில் உள்ளன!
அன்புடன் சேர்த்து!!
அடையாளம் தேவையா! அன்புக்கு???