நெல்லை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உதயகுமார், முகிலன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் ஏ.எல்.எஸ். லட்சுமணன், பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அப்துல் வகாப், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் ஆவுடையப்பன், ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் மு. அப்பாவு, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரன் ஆகிய 5 வேட்பாளர்களை அறிமுகம் செய்து நெல்லை டவுன் வாகையடி முனை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தவழ்ந்து, ஊர்ந்துபோய் முதல்வர் பதவிக்கு பழனிசாமி வந்ததாக நான் குறிப்பிட்டது, அவரை அவமானப்படுத்த இல்லை. நடந்ததை சொன்னேன். அனைவரும் சமூக வலைதங்களில் அதை பார்த்துள்ளார்கள். அதை நான் சொன்னதுக்காக முதல்வருக்கு கோபம் வந்து விட்டது. தவழ்ந்துபோனது உண்மையா என்பதை மக்கள் சொல்கிறார்கள். இதை சொன்னதற்காக என் மீது வழக்கு போடுங்கள்.

அந்தக் காட்சியை பார்த்தவர்கள் அத்தனைபேர் மீதும் வழக்கு போடுங்கள். நான் ஊர்ந்து போவதற்கு பாம்பா, பல்லியா என்று முதல்வர் கேட்டுள்ளார். விஷப்பாம்பு, பல்லி விஷத்தைவிட துரோகம் என்ற விஷம்தான் பெரிய விஷம். யாரால் பதவிக்கு வந்தாரோ அவருக்கே துரோகத்தை செய்தவர் பழனிசாமி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர், இப்போது அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார். அதிமுக பாஜகவின் கிளை கழகமாக மாறிவிட்டது.

தேர்தல் வருவதையொட்டி பல்வேறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவிக்கிறார். ஆனால் கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்தீர்களா? உதயகுமார், புஷ்பராஜ், முகிலன் ஆகியோர் மீதான வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா?

2011 முதல் எமர்ஜென்சி காலத்தைப்போல் அப்பகுதியை ஆளுங்கட்சியினர் உருவாக்கி வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் போராட்ட வழக்குகள், தேசத்துரோக வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். இப்போது நாளுக்குநாள் விலைவாசி விஷம்போல் ஏறிவருகிறது என்று பேசினார்.