சென்னை

குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட  நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.  டில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ராஜபாதையில் இருந்து இந்தியா கேட் வரை நடைபெறுகிறது.  நாளை குடியரசுத்தலைவர் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.  மேலும் சிறப்பு விருதுகளும் அவர் வழங்குகிறார்.  இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்

கொரோனா பரவலை முன்னிட்டு வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும் வழக்கமாக 1.25 லட்சம்  பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் தற்போது 24 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   மேலும் அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன

இந்த விழாவைக் குலைக்கத் தீவிரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஏற்கனவே கடந்த வாரம் காஜிபுர் சந்தையில் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.  எனவே இதையொட்டி டில்லி நகர எல்லைகள்  சீலிடப்பட்டுள்ளன.  நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது  சென்னை மெரினா கடற்கரையில்  நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.  பிறகு அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல விருதுகளை வழங்க உள்ளார்.  இந்த வருட விழாவில்  பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை நகர காவல்துறையினர் பாதுகாப்புப் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.   விழா நடைபெறும் காமராஜர் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் 6800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த விழா முடியும்வரை மெரினா பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.