சென்னை: தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த  தமிழக அரசு தடை போட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாகதடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்கள் தடை மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாளை (ஜன.26ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்துக்கு  தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழ்நிலை மற்றும் பொது மக்களின் நலன் கருதி, 2022 ஜனவரி 26 அன்று கிராம சபையை நடத்த வேண்டாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, 26.01.2022 அன்று கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபையையும் கூட்டக்கூடாது என்று தேவையான உத்தரவுகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”, என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.