டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விசாரணை உச்சநீதி மன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, நேரலை செய்வதற்கான வாய்ப்புகள்  குறித்து அறிக்கை அளிக்க உச்சநீதி மன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோருகின்றன.  இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

முன்னதாக, அயோத்தி சர்ச்சைக்குரிய  நிலம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,  மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் மத்தியஸ்தர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியது. இந்த குழுவினர் ஆகஸ்டு 15ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றமே மீண்டும் விசாரணையை தொடரும் என்று அறிவித்தது.

அதன்படி,  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில்,  நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நாசர் கொண்ட 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அயோத்தி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின்  விசாரணையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் அல்லது நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சார்யா, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரண இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, விசாரணையை நேரலை செய்ய ஆட்சேபனை இல்லை என்றும், அதற்கான வாய்ப்புகள்  குறித்து அறிக்கை அளிக்க உச்சநீதி மன்ற பதிவாளருக்கு உத்தர விடப்பட்டது.