டில்லி

ரஜினிகாந்த் மனைவி லதா மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கோச்சடையான்’ திரைப்படம், வெளியானது. இந்த படம் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டபோதிலும் பெரியளவில் வசூலை ஈட்டவில்லை. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தது.

இந்த கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டார். இந்நிலையில், கடனாக பெற்ற பணத்தை மீடியா ஒன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பி தரவில்லை என கூறி, ஆட்-ப்யூரோ நிறுவனம், பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது.

வழக்கில் முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆதாரங்களைத் திரித்துத் தாக்கல் செய்த பிரிவுகளின்கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு கோர்ட்டு விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்த்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களையும் விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்பாக, பெங்களூரு நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கின் நிலை குறித்து நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால் மத்தியஸ்தர்கள் மூலம் இந்த பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்துள்ளது.