ஸ்ரீநகர்

மாணவ மாணவிகள் படிப்பதுடன் சமூக சேவையும் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறி உள்ளார். 

இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

குடியரசுத் தலைவருடைய பேச்சு பற்றி செயலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பின்படி அவர் பொறுப்புள்ள காஷ்மீர் இளைஞர்களால் நாடு பெருமையடைகிறது எனவும் காஷ்மீர் பல்கலை கழகத்தின் மாணவ மாணவிகள் படிப்புடன் கூட, சமூக சேவையிலும் ஆர்வமுடன் பங்காற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

மாணவர்கள் அப்படிச் செய்யும்போது, சமூக மாற்றங்களைக் கொண்டு வந்து ஓர் எடுத்துக்காட்டை உருவாக்க முடியும் என்றும் கூறி உள்ளார்.

மேலும் நாட்டுக்குச் சேவையாற்றி, இந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவ மாணவிகள் பெருமையைக் கொண்டு வந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், காஷ்மீர் பல்கலை கழகத்தில் 55 சதவீதம் பேர் மாணவிகள் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாராட்டி உள்ளார்