பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இட ஒதுக்கீடு : தலித் மற்றும் பழங்குடி ஆர்வலர்கள் எதிர்ப்பு

Must read

டில்லி

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க உள்ள சட்டத் திருத்தத்துக்கு தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சரவை நாடெங்கும் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது.   இந்த திருத்த மசோதா மாநிலங்கள் அவையின் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.   இன்று மதியம் 2 மணிக்கு இந்த மசோதா குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற உள்ளது.

இந்த சட்ட திருத்தத்துக்கு தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் விவேக் குமார், “இட ஒதுக்கீடு என்பது ஏழ்மையை ஒழிக்கும் திட்டம் இல்லை.   வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை இடஒதுக்கீடு ஆகும்.  இந்த சட்டத்திருத்தம் ஒரு அரசியல் ஸ்டண்ட்” என கூறி உள்ளார்.

தேசிய தலித் அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளர் அசோக் பாரதி, “முன்னேறிய வகுப்பினருக்கு அரசில் கம்மியான இடங்கள் கிடையாது.  ஏற்கனவே அவர்கள் அதிக அளவில் உள்ளதால் அவர்களுக்கு மேலும் இடம் அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.   மேல்தட்டு வகுப்பினருக்காக அரசு சட்டத்தையே வளைக்க நினைக்கிறது” என தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆர்வலரான மஞ்சுளா பிரதீப், “மேல்தட்டு வகுப்பினரை திருப்தி படுத்த அரசு நினைக்கிறது.   அத்துடன் அரசு மேல்தட்டு மக்களுக்கு தனது நன்றியை காட்ட இந்த பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.   இது சமூக நீதிக்கு எதிரானது. ” என கருத்து தெரிவித்துள்ளார்.

தேசிய தலித்துக்கள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் ரமேஷ் நாதன், “இது சமுக நீதியை மட்டுமின்றி இட ஒதுக்கீடு கோரும் பலருக்கும் பாதகம் அளிக்கும் அறிவிப்பு ஆகும்.  ஏற்கனவே கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர்களில் சில பிரிவினர் தங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்க கோரி உள்ளனர்.   அனால் அதை கவனத்தில் கொள்ளாத இந்த அரசு மேல் சாதி மக்களின் நலனுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.

More articles

Latest article