கோவை: தேனியில் இருந்த  பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை நள்ளிரவு கைது செய்த காவல்துறையினர், அவரை கோவைக்கு அழைத்துச் சென்ற  வாகனம், செல்லும் வழியில்  விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் உள்பட காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சவுக்கு மீடியோ என்ற பெயரில் ஊடகும், சவுக்கு என்ற பெயரில் டியூபும் நடத்தி வருபவர் சவுக்கு சங்கர். இவர் திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார். திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள், ஆட்சியாளர்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்து அவ்வப்போது பரபரப்பு தகவல்களை தெரிவிப்பதுடன், தமிழ்நாடு அரசு காவல்துறை, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல்துறையாக செயல்படுவதையும் சுட்டிகாட்டி வருகிறார். இதனால், ஏற்கனவே சவுக்கு சங்கரை கைது செய்து சுமார் 2 மாதம் சிறையில் அடைத்த தமிழ்நாடு அரசு தற்போது, காவல்துறையினரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்து, அவரை நள்ளிரவில் கைது செய்தது.

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, . அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஐபிசி பிரிவுகள் 294(பி), 509, 353 ஆகியவற்றின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 பிரிவு 67 இன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை  நள்ளிரவு கைது செய்த  கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், அவரை  காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தாராபுரம் அருகே அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. விபத்தில் வாகனத்தில் இருந்த காவலர்களுக்கும், சவுக்கு சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் கோவைக்கு வரும் வழியில் இருந்த ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல் துறையினர் அழைத்து வந்தனர்.

சவுக்கு சங்கர்மீது, ஜாமினில் வெளிவர முடியாத வகையில், 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கோவை மாநகர காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த விபரங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், சமூக வலைதளங்களில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.