சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி  பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  சனாதனம் குறித்து தான் பேசியது தனது ‘தனிப்பட்ட கருத்து’  என பொதுவெளியில் பேசிய அமைச்சர் உதயநிதி மாற்றி கூறி உள்ளார்.

அமைச்சர்கள் தாங்கள் எடுத்த உறுதிமொழியின்படி, எந்த மதத்துக்கும், இனத்துக்கும், சாதிக்கும், மொழிக்கும் எதிராக பேசக்கூடாது என்பது அரசியலமைப்பு சட்டவிதி.. அவை எல்லாத்தையும் மீறும் வகையில் இந்து மதத்தை உதயிநிதி விமர்சனம் செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்மீது பல்வேறு மாநிலங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என உதயிநிதி கூறியிருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட உரையாற்றிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , சனாதன தர்மத்தை “மலேரியா” மற்றும் “டெங்கு” வுடன் ஒப்பிட்டு பேசினார். “சனாதனத்தை எதிர்ப்பதை விட, அதை ஒழிக்க வேண்டும். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது” என்று உதயநிதி கூறினார். இது தேசிய அளவில் பெரும் அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்த பிறகும், உதயநிதி தனது வார்த்தைகளில் தான் நிற்பதாகக் கூறியதுடன், தனது கருத்துக்கள் இனப்படுகொலைக்கான அழைப்பாக தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் கூறினார். இந்த மாநாட்டில்  அமைச்சர் சேகர்பாபுவும், திமுக எம்.பி. ராஜாவும் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய விசலாரணையின்போது, அமைச்சர்  உதயநிதி தரப்பிலும், சட்டப்பேரவைச் செயலர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மனுஸ்மிருதி, சனாதனம் ஆகியவற்றையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் உத்தரவுகளையும் மேற்கோள்காட்டி வாதிட்டார். தொடர்ந்து அவர் கூறும்போது,  சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? மனுதாரர்களுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதில் இருந்தே இந்த வழக்கில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்பது தெளிவாகிறது.

உதயநிதி தனிப்பட்ட முறையில்தான் இந்த கருத்தை தெரிவித்தார். அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. உரிய தகுதியில்லாமல் பதவி வகித்தால் மட்டுமே எந்த தகுதியின்அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கோரி கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

சனாதனம் குறித்து அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. சாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும்,அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும்தான் உதயநிதிபேசியுள்ளார்.

இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை என்றும் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்.31-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றையதினம் அந்த நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ், அதில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உதயநிதி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய வீடியோ – நன்றி நியூஸ் தமிழ்

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதியின் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், அவர் தற்போது நீதிமன்றத்தில் மாற்றி தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் 9ந்தேதி அன்று, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் நடைப்பெற்றது. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி,
தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் வெல்ல முடியாது. அதற்கு காரணம் திமுக கட்டியுள்ள வலுவான அணியும், அந்த அணியை வழிநடத்தும் கேப்டன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தான்.

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை. கொள்கைக்காக நிற்போம். சனாதனம் குறித்து பேசியதற்காக என் தலைக்கு ரூ.10 கோடி, ரூ.100 கோடி என வருவோர், போவோர் எல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அம்பேத்கார், பெரியார், அண்ணா பேசாததை நான் பேசவில்லை என கூறியிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை என கூறினார்.

 

வீடியோ உதவி: நன்றி காமதேனு

ஆனால், தற்போது, சனாதனம் குறித்து தான் பேசியது, தனது தனிப்பட்ட கருத்து என கூறி பல்டி அடித்துள்ளார்.