கல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
கடந்த 8ந்தேதி மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபிறகு, நாட்டின் பணத்தட்டுப்பாடு அதிகரித்து அன்றாட வாழ்க்கைக்கே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகளும் போதிய அளவில் புழக்கத்திற்கு வராததால், மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.
இதன் காரணமாக, நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி. இதுகுறித்து தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தார்.
தற்போது மாதத்தின் இறுதி பகுதி நெருங்குவதால் அரசு ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்ய வேண்டியது உள்ளது. தற்போது நாட்டில் நிலவி வரும் பணப்புழக்க பிரச்சினையால், சம்பளம் பட்டுவாடா செய்தாலும், அதை வங்கிகளில் இருந்து எடுப்பது சாத்தியமில்லை என்ற நிலையே நீடித்து வருகிறது.
இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.
மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே ரொக்கமாக அளிக்கும் என்றும் அறிவித்து உள்ளார்.
இதன் காரணமாக அரசு ஊழியர்கள் சந்தோஷமாக உள்ளனர்.