narayna
புதுவை:
புதுவை மாநிலத்தில் நடைபெற்ற நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாள ரான முதல்வர் நாராயணசாமி  அமோக வெற்றி பெற்றுள்ளார். எனது வெற்றி – காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் என்றார் நாராயணசாமி.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,183 வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார் புதுவை முதல்வர். நாராயணசாமி 18,709 வாக்குகளையும், ஓம்சக்தி சேகர் 7,526 வாக்குகளையும் பெற்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக மேலிடத்தால் தேர்வு செய்யப்பட்டார்
தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவி ஏற்ற  காரணத்தால், 6 மாதத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழல் நாராயணசாமிக்கு ஏற்பட்டது.
இதைகருத்தில்கொண்டு, முதல்வர் நாராயணசாமி போட்டியிட வசதியாக, ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற நெல்லித்தோப்பு தொகுதி  எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதிக்கு கடந்த 19–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம் சக்தி சேகர் உட்பட 8 பேர் போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து முன்னிலை வகித்த காங்கிரஸ் வேட்பாளரான நாராயணசாமி வெற்றிக்கனியை பறித்தார்.
எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11, 144 வாக்குகள் அதிகம் பெற்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது,
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்  என்றார்.  மேலும்  நெல்லித்தோப்பு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றிக்கு பணியாற்றிய காங்கிரஸ் மற்றும் திமுகவினருக்கும், கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதுவை முதல்வர் நாராயணசாமி நாளை சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார்.