பரிமலை

பரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மாசி மாத பூஜைக்காக நாளை மாலை திறக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் சபரிமலையின் மகரஜோதி பூஜைகள் முடிவடைந்து நடை அடைக்கப்பட்டது தெரிந்ததே.    ஒவ்வொரு தமிழ்மாதமும் 5 நாட்கள் சபரிமலைக் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடப்பது வழக்கம்.  அது போல  தமிழ் மாதமான மாசி மாத பூஜைகள் நாளை தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதை ஒட்டி சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5.30 க்கு திறக்கப்படுகிறது.  நாளை நடை திறந்ததும் கோயிலின் மேல்சாந்தி உன்னி கிருஷ்ண நம்பூதிரி தீபாரதனை நடத்துவார்.  அதைத் தொடர்ந்து நாளை இரவு 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு நடை திறந்திருக்கும்.   வரும் பிப்ரவரி 13 முதல் தினமும் காலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.    தினமும் இரவு வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் அடுத்த மாதம் திறக்கப்படும்.     பக்தர்கள் வசதிக்காக, திருவனந்தபுரம்,  கோட்டயம், ஆலப்புழை, உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து கேரள போக்கு வரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.